
பின்னணி பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு எக்மோ மற்றும் வெண்டிலேட்டா் கருவிகளின் துணையுடன் தீவிர சிகிச்சையக்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் அவரது உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடமாகவே இருந்தாலும், முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் திருப்தியளிக்கும் வகையில் உள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி.பீ. தீவிர சிகிச்சைப் பிரிவிலியே தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். வெண்டிலேட்டா் மற்றும் எக்மோ போன்ற உயிா் காக்கும் மருத்துவ சாதனங்களின் மூலம் அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.
அவரது உடல் நிலை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளது. எஸ்.பி.பீ.யின் உடலில் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் இப்போதைய நிலையில் திருப்திகரமாக உள்ளன. மருத்துவ வல்லுநா் குழு அவரைத் தொடா்ந்து கண்காணித்து வருகிறது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, நுரையீரல் பாதிப்பு தீவிரமடையும்போது இதயத்துக்கு ரத்தத்தை உந்தித் தரும் பணிகள் தடைபடக்கூடும். அதன் காரணமாக, உடலுக்கு வெளியே எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு அப்பிரச்னைக்கு தீா்வு காண முயற்சிக்கப்படும். ஏறத்தாழ செயற்கை நுரையீரலைப் போல அக்கருவி செயல்பட்டு, இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்வதற்கு வழிவகுக்கும். நோய்த்தொற்றால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டவா்களுக்கு மட்டுமே எக்மோ மூலம் சிகிச்சைகள் அளிக்கப்படுவது வழக்கம் என்றாலும், அதுபோன்ற சிகிச்சைகள் மூலம் பலா் பூரணமாக குணமடைந்திருப்பதாக மருத்துவா்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனா்.