NHDA மக்களுக்கு வழங்கிய கடனில் 10 பில்லியன் ரூபா நிலுவை

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை 1979 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதன் பின்னர் மக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையில் 10 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை இதுவரை வசூலிக்கப்படவில்லையென தெரியவந்துள்ளது.

மாதாந்தம் 563 மில்லியன் ரூபா வசூலிக்கப்பட வேண்டும், ஆனால் ஜூலை மாதத்தில் 127 மில்லியன் ரூபாய் மட்டுமே

வசூலிக்கப்பட்டுள்ளது. இது 23 சதவீதமாகும்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர்களுக்கு தெளிவூட்டும் நோக்குடன் நேற்று (19) கண்டியில் நடைபெற்ற விசேட செயலமர்வில் இந்த விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டன. இந்த சந்திப்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் கலந்து கொண்டார்.

அத்துடன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட கடன்களை மீளப்பெறுவதற்கான அவசர வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

மாதாந்தம் 300 மில்லியன் ரூபாவை சேகரிக்கும் இலக்குடன் கூடிய வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

கண்டி ரஜபீல்ல ஒக்ரே விழா மண்டபத்தில் இந்த செயலமர்வு நடைபெற்றது.

2015 –-2019 ஆம் ஆண்டில், அந்த அதிகாரசபைக்குச் சொந்தமான அனைத்து சொத்துக்களையும் பயன்படுத்தி கடன் வழங்கப்பட்டது. கடனுக்கான முழு தவணையை வசூலிக்காததால் மீளப்பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமை இந்த நிலைக்கு முக்கியக் காரணமென அந்த அதிகார சபையின் பொது முகாமையாளர் கே.ஏ. ஜனக வெளிப்படுத்தினார். மேலும், நாட்டில் நிலவும் கோவிட்19 தொற்று, பொருளாதார பிரச்சினை மற்றும் அரசியல் ஸ்திரமின்மை போன்ற காரணங்களால் இந்த கடன் வசூல் குறைவடைந்துள்ளதாக அவர் கூறினார்.கடனை மீளப்பெறுவதற்கு எதிர்வரும் காலங்களில் மாவட்ட முகாமையாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டுமென அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்தார். கடன் தவணைகளை முறையாக வசூலிக்க முடியாவிட்டால் ஊழியர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாமல் போகலாமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி 300 மில்லியன் ரூபா மாதாந்த கடன் தவணைகளை அறவிடுவதே அதிகாரசபையின் இலக்கு எனவும் அது கட்டாயம் எனவும் தெரிவித்த தலைவர், நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் அதிகார சபை விருந்தொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுத்தார்.

இந்த அதிகார சபையை மீண்டும் பலப்படுத்துவதற்கு புதிய நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக சில அரசியல் குழுக்கள் இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணிகளில் அதிகளவான அனுமதியற்ற குடியிருப்பாளர்கள் மற்றும் அனுமதியற்ற கட்டட நிர்மாணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தலைவர் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மக்களின் அடிப்படைத் தேவையான வீடொன்றை நிறைவேற்றுவதற்காகவே தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் தேவையற்ற அரசியல் தலையீடுகள் வீழ்ச்சிக்கு வழிவகுத்ததாகவும், இதனை மீளக் கட்டியெழுப்புவது தமது நம்பிக்கை எனவும் தெரிவித்த அமைச்சர், தற்போதைய பொருளாதார நெருக்கடி மீண்டவுடன் புதிய வீடமைப்புத் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும் என்றார்.

நீண்டகாலமாக தீர்க்கப்படாமலுள்ள வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் நடமாடும் சேவைத் திட்டங்களை மாவட்ட மட்டத்தில் உடனடியாக ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

இந்த செயலமர்வில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாவட்ட முகாமையாளர்களும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்