IPL 16 புள்ளிகளைப் பெற்றது மும்பை!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

13 வது ஐபிஎல் சீசனின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.

நாணய சுழற்சியை வென்ற மும்பை தலைவர் கைரன் பொலார்ட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ஓட்டங்கள் எடுத்தது.

165 ஓட்டங்கள் இலக்கு என்ற வெற்றி இலக்குடன் மும்பை தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக், இஷான் கிஷன் களமிறங்கினர். இந்த இணை பெரிதளவில் அதிரடி காட்டவில்லை. இந்த நிலையில் பவர் பிளேவின் கடைசி ஓவரை வீசிய சிராஜ் முதல் விக்கெட்டாக டி காக்கை (18 ஓட்டங்கள்) ஆட்டமிழக்கச் செய்தார். கிஷனும் பவர் பிளே முடிந்தவுடன் யுஸ்வேந்திர சஹால் பந்தில் 25 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய சௌரப் திவாரி 5 ஓட்டங்களுக்கும், க்ருணால் பாண்டியா 10 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தாலும், சூர்யகுமார் யாதவ் பவுண்டரிகள் அடித்து பெங்களூருவுக்கு நெருக்கடியளித்து வந்தார். இதனால், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் ஓவருக்கு 10 ஐத் தொடவில்லை.

கடைசி 5 ஓவர்களில் மும்பை வெற்றிக்கு 48 ஓட்டங்கள் தேவை என்ற நிலை இருந்தது. சிராஜ் வீசிய 16 வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சூர்யகுமார் அரைசதத்தை எட்டினார். அதே ஓவரில் மேற்கொண்டு 2 பவுண்டரிகளையும் விரட்டி அசத்தினார் சூர்யகுமார். அடுத்த 2 ஓவர்களில் முறையே 1 பவுண்டரியும் சிக்ஸரும் கிடைக்க கடைசி 2 ஓவர்களில் மும்பை வெற்றிக்கு 16 ஓட்டங்கள் மட்டுமே தேவை என்ற நிலை உருவானது.

மாரிஸ் வீசிய 19 வது ஓவரில் ஹார்திக் பாண்டியா சிக்ஸர் அடித்து அசத்தினாலும் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அவர் 15 பந்துகளில் 17 ஓட்டங்கள் எடுத்தார். எனினும் புதிதாகக் களமிறங்கிய பொலார்ட் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார்.

இதனால், அந்த ஓவரில் 13 ஓட்டங்கள் கிடைக்க, கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 3 ஓட்டங்கள் தேவைப்பட்டன. கடைசி ஓவரை சிராஜ் வீச முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டி அணியை வெற்றி பெறச் செய்தார் சூர்யகுமார்.

19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ஓட்டங்கள் எடுத்த மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் 43 பந்துகளில் 79 ஓட்டங்கள் எடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்