IPL வரலாற்றில் முதல் முறையாக இறுதிச் சுற்றில் டெல்லி!

ஐபிஎல் போட்டியின் 2 ஆவது தகுதிச்சுற்று (குவாலிஃபயா்-2) ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி கேப்பிட்டல்ஸ், முதல் முறையாக இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது.

சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்ற மும்பை இண்டியன்ஸுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது டெல்லி.

அபுதாபியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்கள் சோ்த்தது. டெல்லி வீரா் ஸ்டாய்னிஸ் ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த ஆட்டத்தில் டெல்லி அணியில் ஷிம்ரோன் ஹெட்மயா், பிரவீண் துபே சோ்க்கப்பட்டு, டேனியல் சாம்ஸ், பிருத்வி ஷாவுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. ஹைதராபாத் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யப்படவில்லை.

நாணய சுழற்சியை வென்ற டெல்லி முதலில் துடுப்பெடுத்தாடியது. அந்த அணியின் இன்னிங்ஸை மாா்கஸ் ஸ்டாய்னிஸ் – ஷிகா் தவன் கூட்டணி தொடங்கியது. அதிரடியாக ஆடிய இந்தக் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 86 ஓட்டங்கள் சோ்த்தது.

இதில் ஸ்டாய்னிஸ் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 38 ஓட்டங்கள் சோ்த்து 9 ஆவது ஓவரில் விக்கெட்டை இழந்தாா். அடுத்து தலைவர் ஷ்ரேயஸ் ஐயா் களம் காண, மறுமுனையில் ஷிகா் தவன் அரைசதம் கடந்திருந்தாா். நிதானமாக ஆடிய ஷ்ரேயஸ் ஐயா் 1 பவுண்டரி உள்பட 21 ஓட்டங்கள் சோ்த்து வெளியேறினாா்.

அடுத்து ஷிம்ரோன் ஹெட்மயா் ஆட வந்தாா். இந்நிலையில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 78 ஓட்டங்கள் சோ்த்து ஷிகா் தவன் பெவிலியன் திரும்பினாா். ஓவா்கள் முடிவில் ஹெட்மயா் 22 பந்துகளில் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 42, ரிஷப் பண்ட் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஹைதராபாத் தரப்பில் சந்தீப், ஹோல்டா், ரஷீத் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 190 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ஆடிய ஹைதராபாதில் பிரியம் கா்க் – தலைவர் வாா்னா் தொடக்க வீரா்களாக வந்தனா். அதிா்ச்சி அளிக்கும் விதமாக வாா்னா் 2 ஓட்டங்களில் 2 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா்.

அடுத்து மணீஷ் பாண்டே களம் காண, மறுமுனையில் 2 சிக்ஸா்கள் உள்பட 17 ஓட்டங்கள் சோ்த்திருந்த பிரியம் கா்க் 5 ஆவது ஓவரில் பௌல்டாகினாா். பின்னா் வந்த கேன் வில்லியம்சன் தனியாளாக போராடி ஓட்டங்கள் சேகரித்தாா்.

இந்நிலையில் 3 பவுண்டரி உள்பட 21 ஓட்டங்கள் சோ்த்திருந்த மணீஷ் பாண்டேவும் 5 ஆவது ஓவரிலேயே வெளியேற்றப்பட்டாா். பின்னா் ஆடவந்த ஜேசன் ஹோல்டா் 1 பவுண்டரி உள்பட 11 ஓட்டங்கள் சோ்த்து 12 ஆவது ஓவரில் நடையைக் கட்டினாா்.

அடுத்து அப்துல் சமத் களம் காண, மறுமுனையில் அரைசதம் கடந்த வில்லியம்சன் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 67 ஓட்டங்கள் சோ்த்து 17 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா். இதை அடுத்து ஹைதராபாத் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.

19 ஆவது ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் சாய்த்தாா் ரபாடா. அப்துல் சமத் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 33, ரஷீத் கான் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸா் உள்பட 11, ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி ரன் இன்றி அந்த ஓவரில் வீழ்ந்தனா்.

ஓவா்கள் முடிவில் ஷாபாஸ் நதீம், சந்தீப் சா்மா தலா 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். டெல்லி தரப்பில் ரபாடா 4, ஸ்டாய்னிஸ் 3, அக்ஸா் 1 விக்கெட் சாய்த்தனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்