IPL பிளே-ஒப் சுற்றின் முதல் போட்டி இன்று; மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ள டெல்லி

ஐ.பி.எல். தொடரில் இன்று ஆர்பமாகும் பிளே – ஒப் சுற்றின் முதல் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.

8 அணிகள் பங்கு பற்றிய இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ், டெல்லி கெப்பிட்டல்ஸ் சன் ரைஸர்ஸ் ஐதராபாத் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளன.

இந் நிலையில் துபாயில் இன்று நடக்கும் பிளே – ஒப் சுற்றின் முதல் போட்டியில் தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதல் இடங்களை பிடித்த மும்பை அணியும் டெல்லி அணியும் மோதவுள்ளன.

9 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கம்பீரமாக முதலிடத்தை பிடித்த மும்பை அணி துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் வலுவாக உள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மும்பை அணி 6 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

இதேவேளை டெல்லி அணி முதல் 9 போட்டிகளில் 7 இல் வெற்றி பெற்று ஆரம்பத்தில் வீறு நடைபோட்டது. எனினும் அதன் பிறகு வரிசையாக நான்கு போட்டிகளில் தோல்வியைத் தழுவியமையினால் பிளே-ஒப் சுற்றுக்கு தகுதி பெறுமா? என்பதே கேள்விக்குறியானது.

எவ்வாறெனினும் இறுதி லீக்கில் பெங்களூருவை தோற்கடித்து 8 வெற்றிகளுடன் பிளே-ஒப் சுற்றில் கால்பதித்தது.

தற்போது விளையாடும் 8 அணிகளில் ஐ.பி.எல்.-ல் இறுதிசுற்றை எட்டாத ஒரே அணி டெல்லி தான். அந்த நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டி வரலாறு படைக்க அருமையான வாய்ப்பு டெல்லிக்கு கனிந்துள்ளது.

இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த இரண்டு லீக் போட்டிகளிலும் மும்பை அணி 9 விக்கெட் மற்றும் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.

இதில் ஒரு போட்டியில் டெல்லியை வெறும் 110 ஓட்டங்களில் சுருண்டது

இப் போட்டியானது துபாயில் இன்று மாலை 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றி காணும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வியடையும் அணி போட்டியை விட்டு வெளியேறாது.

அந்த அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது தோல்வி அடையும் அணி, வெளியேற்றுதல் சுற்றில் (ஐதராபாத்- பெங்களூரு) வெற்றி பெறும் அணியுடன் இறுதிப்போட்டிக்கான 2 ஆவது தகுதி சுற்றில் மோதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்