FFSL முயற்சிகளுக்கு ஆதரவை வழங்குவதாக FIFA தலைவர் தெரிவிப்பு

FFSL யாப்பு விதிகளில் திருத்தங்கள் செய்வதற்கும் நிர்வாக உத்தியோகத்தர்கள் தேர்தலுக்கான திகதியை ஏற்பாடு செய்வதற்கும் FFSL எடுத்துவரும் முயற்சிகளுக்கு தனது ஆதரவை வழங்குவதாக FIFA தலைவர் ஜியானி இன்பான்டினோ உறுதியளித்துள்ளார்.

தற்போதைய இந்த செயற்பாடுகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக FIFA மற்றும் AFC ஆகியவற்றின் உயர்மட்ட இணை பணிக்குழுவினர் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் (செப்டெம்பர் தொடக்கத்தில்) இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். 

இந்த குழுவினர் விளையாட்டுத்துறை அமைச்சர், FFSL நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஆகியோரை சந்தித்து யாப்பு விதிகள் திருத்தம் மற்றும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆகியவற்றுக்கான திகதிகளை தீர்மானிக்கவுள்ளனர்.

மேலும் இந்திய கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை போன்று இலங்கைக்கும் விதிக்கப்படலாம் என சில தரப்பினரால் வெளியிடப்படும் ஊகங்கள் போன்று எதுவும் நிகழாது எனவும் FIFA உறுதியளித்துள்ளது.

இந்த விடயங்கள் FFSLஇனால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கத்தார் தேசத்தின் தோஹா நகரில் அமைந்துள்ள FIFA தலைவர் அலுவலகத்தில் FIFA தலைவர் ஜியானி இன்பான்டினோவை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன (FFSL) தலைவர் ஜஸ்வர் உமர் கடந்த வாரம் சந்தித்து கலந்துரையாடியபோது இந்த உறுதிப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது அபிவிருத்தி, நிர்வாகம் மற்றும் கால்பந்தாட்டத்தின் மூலம் சமூகத்திற்கு உதவக்கூடிய அனுகூலமான செயற்பாடுகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து இருவரும் விரிவாக கலந்துரையாடினர்.

உலகம் முழுவதும் கொவிட் – 19 தொற்று நோய் தாக்கத்தால் பெரும்பாலும் அனைத்து வகையான விளையாட்டுக்களும் சுமார் 2 வருடங்கள் முடக்கப்பட்ட பின்னர், FFSL சமகாலத் தலைவர் எடுத்துவரும் ‘கால்பந்தாட்ட மீள் ஆரம்பம்’ என்ற நல்ல முயற்சிகளுக்கு FIFA முழுமையான ஆதரவளிக்கும் என FIFA தலைவர் உறுதியளித்துள்ளார்.

அகில இந்திய கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு FIFA இடைக்காலத் தடை விதித்ததை அடுத்து, 2022 ஆகஸ்ட் 31ஆம் திகதிக்குப் பின்னர் அதேபோன்ற தடை இலங்கைக்கும் விதிக்கப்படலாம் என சில தரப்பினரால் ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

ஆனால், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை நாடு எதிர்கொண்டுள்ள இந்த சூழ்நிலையில் இலங்கைத் தீவை பாதிக்கக்கூடிய எந்த முடிவையும் உலக கால்பந்தாட்ட நிர்வாகம் எடுக்காது என FIFA உறுதிப்படுத்தியதாக சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்