Coronavirus News: தனித்தீவில் தனிமை, தனியார் விமானங்களில் பயணம் – கடந்த 24 மணி நேரத்தில் நடந்தவை

ஒவ்வொரு பேரிடரும் யாரோ ஒருவருக்கு வருமானத்தை ஈட்டி தருகிறது. அப்படித்தான் கொரோனா வைரஸும். உலகமே கொரோனா வைரஸ் அச்சத்தில் இருக்க தனியார் ஜெட் விமானங்களின் வருவாய் இந்த கொரோனா வைரஸ் தொற்று காரணமாகப் பல மடங்கு உயர்ந்துள்ளது.

என்ன காரணம்?

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள அச்சத்தால் பெரும் பணக்காரர்கள் மக்களுடன் மக்களாக விமானங்களில் பயணிக்க அஞ்சுகிறார்கள். தங்கள் பயணங்களுக்கென தனி விமானங்களை ஏற்பாடு செய்ய சொல்லி விமான நிறுவனங்களை (Charter Jets) அணுகுவது அதிகரித்திருக்கிறது. இப்படியான பயணங்களின் கட்டணம் மிக அதிகம்.

ஆனால் அதே நேரம், ஆள்பற்றாகுறை, கொரோனா அச்சம் காரணமாகத் தேவைக்கேற்ற விமானங்களை ஏற்பாடு செய்ய முடியவில்லை.

பிபிசியிடம் பேசிய ஆஸ்திரேலியாவை தலைமையகமாகக் கொண்ட டாரின் வோல்ஸ் பிரைவேட் பிசினஸ் ஜெட் நிறுவனம், “பலர் எங்களை அணுகுகிறார்கள். ஆனால், ஆள்பற்றாகுறை காரணமாக தேவையை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை,” என்கிறது.

சிங்கப்பூரை நிறுவனமான மைஜெட் ஆசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி லோகன் ரவிசங்கர், “80 – 90 சதவீதம் அளவில் எங்களது சேவை அதிகரித்துள்ளது,” என்கிறார்.

எவ்வளவு கட்டணம்?

பத்து பேர் அமரக் கூடிய இதுமாதிரி விமானங்களை வாடகைக்கு எடுக்க ஒரு மணி நேரத்திற்குக் குறைந்தது 420,000 ரூபாய் ஆகும்.

நான்கு பேர் அமரக்கூடிய சிறிய ரக விமானங்கள் என்றால் ஒரு மணி நேரத்திற்குக் குறைந்தது 168000 ரூபாய் ஆகும்.

முகநூலில் நாம்