
தொழிலுக்காக ஓமானுக்கு பயணிக்கும் போது உரிய நடைமுறைகளை மாத்திரம்
பின்பற்றுமாறு ஓமானிலுள்ள இலங்கை தூதரகம் நேற்று அறிவித்துள்ளது.
சுற்றுலா விசாவில் ஓமானுக்கு அழைத்துச்செல்லப்படும் இலங்கை பெண்கள்
துன்புறுத்தல்களுக்கு இலக்காகின்றமை தொடர்பிலான சம்பவங்கள்
அதிகரித்துள்ள நிலையிலேயே தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
சுற்றுலா விசாவில் அபுதாபி ஊடாக ஓமானுக்கு அழைத்துச்செல்லப்பட்ட இலங்கை
பெண்கள் 12 பேர் தொடர்பாக கடந்த சில தினங்களாக தகவல்களை ஊடகங்கள்
வௌியிட்டு வருகின்றன
இவ்வாறன நிலையில் சுற்றுலா விசாவில் ஓமானுக்கு அழைத்துச்செல்லப்படுகின்ற
இலங்கை பெண்கள் பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்யப்பட்டமை
குற்றப்புலனய்வு திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளில் உறுதியானது.
இதேவேளை, தூதரகத்தின் கீழுள்ள பாதுகாப்பு இல்லத்தில் 90 பெண்கள்
தங்கவைக்கப்பட்டுள்ளதாக ஓமானுக்கான இலங்கை தூதரகம் விடுத்துள்ள
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்கள் இலங்கைக்கு திரும்புவதற்கு தூதரகத்தின் ஒத்துழைப்பை
எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர்களிடம் போதியளவு பணம் இல்லை எனவும் அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.