
பி. சரவணமுத்து ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற 88 ஆவது புனிதர்கள் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் புனித பேதுருவானவர் அணி ஆதிக்கம் செலுத்தியபோதிலும் சதீஷ் ஜயவர்தனவின் ஆட்டம் இழக்காத சதத்தின் உதவியுடன் புனித சூசையப்பர் அணி ஆட்டத்தை சமப்படுத்திக்கொண்டது.

இப் போட்டியில் மிகவும் கடினமான 321 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய புனித சூசையப்பர் அணி 5 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இந்த வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியில் இடம்பெற்ற அணித் தலைவர் துனித் வெல்லாலகே, ஷெவொன் டெனியல் ஆகியோர் புனித சூசையப்பர் அணியில் இடம்பெற்றபோதிலும் அவ்வணியினால் எதிர்பார்த்தளவு சாதிக்க முடியாமல் போனது.
அப் போட்டியில் துனித் வெல்லாலகேயை இரண்டு இன்னிங்ஸ்களிலும் நிமன் உமேஷ் ஆட்டமிழக்கச் செய்தார். புனித சூசையப்பர் அணியில் ஒரு பக்கத்தில் விக்கெட்கள் சரிந்து கொண்டிருக்க, ஆரம்ப வீரர் சதீஷ் ஜயவிக்ரம மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 103 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
சதீஷ் ஜயவிக்ரமவை விட புனித பேதுருவானர் அணி வீரர்களான ஷெனால் பொத்தேஜு, தனல் ஹெமானந்த, அபிலாஷ் வெல்லாலகே, லஹிரு தெவட்டகே, புனித சூசையப்பர் வீரர் ஷெவொன் டெனியல் ஆகியோர் இந்த வருட புனிதர்களின் சமரில் அரைச் சதங்களைக் குவித்து பாராட்டைப் பெற்றனர். ஷெவொன் டெனியல் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தமை மற்றொரு விசேட அம்சமாகும்.
புனித சூசையப்பர் அணியில் முரளிதரனின் மகன். உலக சுழல்பந்துவீச்சு ஜாம்பனும் இரட்டை உலக சாதனை நாயகனுமான முத்தையா முரளிதரனின் மகன் நரேன் முரளிதரன், புனித சூசையப்பர் அணி சார்பாக ஆரம்ப வீரராக விளையாடினார். நரேன் முரளிதரன் தனது தந்தையின் பச்சுவீச்சு பாணியை பின்பற்றி பந்துவீசுகிறார்.
இந்த வருடம் கிரிக்கெட் போட்டிகள் முறையாக விளையாடப்படாத நிலையில் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் பிரகாசிக்கத் தவறிய நரேன் முரளிதரன், அடுத்துவரும் கிரிக்கெட் பருவகாலத்தில் பிரகாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனம் புனிதர்களின் சமருக்கு பிரதான அனுசரணை வழங்கியது. பரிசளிப்பு வைபவத்தில் கலந்து கொண்ட டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் கூட்டாண்மை திட்டமிடல் மற்றும் வியூகம் அமைப்பு உதவித் தலைவர் முனேஷ் டேவிட்டிடம் இருந்து ஆட்ட நாயகன் விருதை புனித சூசையப்பர் அணி வீரர் சதீஷ் ஜயவர்தன பெற்றுக்கொள்வதைப் படத்தில் காணலாம். படத்தில் அருட்தந்தை ப்ரியான் திசேரா (விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர், புனித சூசையப்பர்), அருட்தந்தை ரஞ்சித் அண்ட்ராடி (முதல்வர், புனித சூசையப்பர்), உப்புல் அதிகாரி (சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி எச்என்பி), அருட்தந்தை ரோஹித்த ரொட்றிகோ (முதல்வர் புனித பேதுருவானவர்), அருட்தந்தை மிலான் பேர்னார்ட் (விளையாட்டுத்துறை இணைப்பாளர், புனித பேதுருவானவர்), துலிக்க ஜயமான்ன (பங்காளித்துவங்கள் மற்றும் கொடுப்பனவு பிரிவு தலைமை அதிகாரி – டராஸ்), ரெல்ஸ்டன் குணதிலக்க (ஊக்குவிப்பு முகாமையாளர் – சன்/கோல்ட் எவ்எம்) ஆகியோரும் காணப்படுகின்றனர்.
விசேட விருதுகள்
ஆட்டநாயகன்: சதீஷ் ஜயவர்தன (புனித சூசையப்பர்)
சிறந்த சகலதுறை வீரர்: ஷெவொன் டெனியல் (புனித சூசையப்பர்).
சிறந்த துடுப்பாட்ட வீரர்: ஷெனால் பொத்தேஜு (புனித பேதுருவானவர்).
சிறந்த பந்துவீச்சாளர்: வனுஜ குமார (புனித பேதுருவானவர்).
சிறந்த களத்தடுப்பாளர்: லஹிரு தெவட்டகே (புனித பேதுருவானர்)
எண்ணிக்கை சுருக்கம்
புனித பேதுருவானர் 1ஆவது இன்: 251 – 8 விக். (ஷெனால் பொத்தேஜு 81, டெனியல் ஹேமானந்த 55 ஆ.இ., ஷன்ஷே குணதிலக்க 47, ஷெவொன் டெனியல் 67 – 3 விக்., துனித் வெல்லாலகே (92 – 3 விக்.)
புனித சூசையப்பர் 1ஆவது இன்: 163 (ஷெவொன் டெனியல் 71, வனுஜ குமார 63 – 4 விக்., ஷெனன் ரொட்றிகோ 26 – 3 விக்.)
புனித பேதுருவானர் 2ஆவது இன்: 232 – 7 விக். டிக்ளயார்ட் (அபிலாஷ் வெல்லாலகே 61, லஹிரு தெவட்டகே 53, ஷெவன் டெனியல் 80 – 5 விக்.)
புனித சூசையப்பர் 2ஆவது இன்: வெற்றி இலக்கு (321 ஓட்டங்கள்) ஆட்டநேர முடிவில் 163 – 5 விக். (சதீஷ் ஜயவர்தன 103 ஆ.இ.)