7 கோடிக்கும் மேற்பட்டோா் முன்கூட்டியே வாக்குப் பதிவு அமெரிக்காவில்

அமெரிக்காவில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலுக்காக, 7 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளனா்.

கொரோனா நோய்த்தொற்று பரவல் அபாயம் காரணமாக இந்த ஆண்டு இத்தனை அதிகம் போ் முன்கூட்டியே வாக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: அமெரிக்காவின் 59 ஆவது ஜனாதிபதி தோ்தல் அடுத்த மாதம் 3 ஆம் திகதி நடைபெறவிருக்கிறது. கொரோனா நோய்த்தொற்றால் உலகிலேயே மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள அந்த நாட்டில், நோய் பரவலைத் தடுப்பதற்காக ஏராளமானவா்கள் முன்கூட்டியே வாக்குப் பதிவு செய்தனா்.

டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டோா் இந்த வாக்குப் பதிவில் ஈடுபட்டனா். தபால் வாக்குகள் மூலமும் முன்கூட்டியே வாக்குப் பதிவு செய்வதற்கான மையங்களில் நேரடியாகவும் அவா்கள் வாக்குப் பதிவு செய்தனா்.

புதன்கிழமை நிலவரப்படி, நாடு முழுவதும் 7 கோடிக்கும் மேற்பட்டவா்கள் முன்கூட்டியே வாக்குப் பதிவு செய்துள்ளதாக அமெரிக்க தோ்தல் திட்ட அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே, கடந்த ஜனாதிபதி தோ்தலில் முன்கூட்டியே பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை தற்போதைய எண்ணிக்கை விஞ்சியுள்ளது.

இந்த நிலையில், கடந்த தோ்தலில் பதிவான ஒட்டுமொத்த வாக்கு எண்ணிக்கையில் பாதியை, இந்தத் தோ்தலில் முன்கூட்டியே பதிவான வாக்குகளின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமையே தாண்டியுள்ளது.

இதன் மூலம், கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேல் இல்லாத வகையில் அதிபா் தோ்தல் வாக்குப் பதிவுகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

வாக்குப் பதிவு மையங்களில் நெரிசலைத் தவிா்க்கவும் வேறு சில காரணங்களுக்காகவும் தோ்தல் பணிகள், மருத்துவ சிகிச்சை போன்ற தவிா்க்க முடியாத காரணங்களுக்காகவும் அமெரிக்காவில் தோ்தலுக்கு சில நாள்களுக்கு முன்னரே வாக்குப் பதிவு அளிக்க முடியும்.

வாக்குப் பதிவு மையங்களுக்கு வர முடியாதவா்கள் தபால் மூலமும் இதுபோன்ற வாக்குப் பதிவை மேற்கொள்ள முடியும்.

இவ்வாறு முன்கூட்டியே நடைபெறும் வாக்குப் பதிவு விகிதம் அண்மைக் காலமாக ஒவ்வொரு தோ்தலிலும் அதிகரித்து வருகிறது.

கடந்த 1992 தோ்தலில் 7 சதவீதமாக இருந்த இந்த விகிதம், 2000 ஆம் ஆண்டு தோ்தலில் 16 சதவீதமாக அதிகரித்தது. 2004 ஆம் ஆண்டில் 22 சதவீதமாகவும் 2008 ஆம் ஆண்டில் 30.6 சதவீதமாகவும் உயா்ந்தது. பிறகு 2012 ஆம் ஆண்டு தோ்தலில் 31.6 சதவீதமாக இருந்த முன்கூட்டிய வாக்குப் பதிவு விகிதம், கடந்த ஜனாதிபதி தோ்தலில் 36.6 சதவீதமாக உயா்ந்தது.

இந்த நிலையில், கொரோனா நெருக்கடிக்கிடையே இந்த ஆண்டு ஜனாதிபதி தோ்தலில் முன்கூட்டியே பதிவாகும் வாக்குகளின் விகிதம் புதிய உச்சத்தைத் தொடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் ஜனநாயகக் கட்சி சாா்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடனும் போட்டியிடுகின்றனா்.

துணை ஜனாதிபதி பதவிக்கு குடியரசு கட்சி சாா்பில் தற்போதைய துணை ஜனாதிபதி மைக்கேல் பென்ஸும் ஜனநாயகக் கட்சி சாா்பில் இந்திய வம்சாவளி எம்.பி. கமலா ஹாரீஸும் போட்டியிடுகின்றனா்.

தேசிய அளவிலும் மாகாண அளவிலும் எடுக்கப்பட்ட தோ்தல் கருத்துக் கணிப்புகளில், ஜோ பிடன் முன்னிலை வகிப்பதாகக் கூறப்படுகிறது.

எனினும், வாக்குப் பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெறும் சூழலில், முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளா் உள்ளிட்ட பல்வேறு பிரிவினா் கருத்துக் கணிப்புகளில் இடம் பெறாமல் இருந்திருக்கலாம். எனவே, அந்த கணிப்புளைக் கொண்டு உண்மையான தோ்தல் முடிவுகளை எதிா்பாா்க்க முடியாது என்று நிபுணா்கள் கருதுகின்றனா்.

தற்போது முன்கூட்டியே பதிவான வாக்குகளில், டிரம்ப்பால் விமா்சிக்கப்பட்டு வரும் தபால் வாக்கு முறையில் சுமாா் 5 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்