50 நாட்களை பூர்த்தி செய்த கோட்டாகோகம போராட்டத்தை  கலைக்க பொலிஸார் நடவடிக்கை

கோட்டை உலக வர்த்தக மையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.

கோட்டாகோகம போராட்டம் ஆரம்பித்து இன்றுடன் 50 நாட்களாகின்றன.

கட்சி சார்பற்ற மக்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், கலைஞர்கள் மற்றும் வல்லுநர்கள் உள்ளிட்ட குழுவினர் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இன்று பேரணியொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போதே அவர்களை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.

ஜனாதிபதி உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என கோரி தொடர்ச்சியாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

பல்வேறு தரப்பினரின் பங்குபற்றுதலுடன், கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து கோட்டாகோகம போராட்டக்களம் நோக்கிய பேரணி இன்று முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட அனைத்து வீதிகளிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதனிடையே, சுதந்திர சதுக்கத்திற்கு அருகிலிருந்து மற்றுமொரு எதிர்ப்பு பேரணி இன்று பிற்பகல் ஆரம்பமானது

கோட்டகோகம போராட்டத்தின் 50 ஆவது நாள் நிறைவை முன்னிட்டு உலக வர்த்தக மையத்திற்கருகிலுள்ள லோட்டஸ் வீதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர்.

இதன்போது போராட்டக்காரர்கள் மும்மொழிகளிலும் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

கோட்டா – ரணில் அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும், மஹிந்த மற்றும் தேஷபந்து உள்ளிட்ட மே 9 தாக்குதலின் சூத்திரதாரிகளாக செயல்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுதலை செய்ய வேண்டும், மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் எனும் கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்தனர்.

இதேவேளை, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் பல நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்று காலை காலி பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக அமைந்துள்ள போராட்டக்களத்தில் மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றதுடன், நகரின் மத்தியில் போராட்டம் வலுப்பெற்றது.

கண்டி, மாத்தளையிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மே 9 தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் கோட்டா – ரணிலின் கூட்டு சதியைத் தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளிலும் குருநாகல் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றது .

இதனைத் தவிர திகன, எம்பிலிப்பிட்டிய, பொலன்னறுவை , வலஸ்முல்ல ஆகிய பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்