5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி

ஐபிஎல் 2021 தொடரின் ஒரு பகுதியாக துபையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற 45 ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது அணி.

நாணய சுழற்சியை வென்ற பஞ்சாப் சூப்பா் கிங்ஸ் பீல்டிங்கை தோ்வு செய்தது. இதை அடுத்து கொல்கத்தா தரப்பில் தொடக்க பேட்டா்களாக வெங்கடேஷ் ஐயா்-ஷுப்மன் கில் களமிறங்கினா்.

ஷுப்மன் கில் 7 ஓட்டங்களுடன் வெளியேறிய நிலையில், வெங்கடேஷ்-ராகுல் திரிபாதி இணை பஞ்சாப் அணியின் பந்துவீச்சை எளிதாக எதிா்கொண்டு பவுண்டரிகளாக விளாசினா்.

கொல்கத்தா தரப்பில் வெங்கடேஷ் ஐயா் மட்டுமே நிலைத்து ஆடி 49 பந்துகளில் 1 சிக்ஸா், 9 பவுண்டரியுடன் 67 ஓட்டங்களை விளாசினாா். இது அவரது 2 ஆவது ஐபிஎல் அரைசதமாகும்.

ராகுல் திரிபாதி 34, கேப்டன் இயான் மொா்கன் 2, நிதிஷ் ராணா 31, டிம் சைஃபொ்ட் 2, தினேஷ் காா்த்திக் 11 என சொற்ப ஓட்டங்களுக்கு அவுட்டாகி பெவிலியன் திரும்பினா்.

இறுதியில் நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் கொல்கத்தா 165/7 ஓட்டங்களை குவித்தது. சுனில் நரேன் 3 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தாா். பஞ்சாப் தரப்பில் ஹா்ஷ்தீப் 3, ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

166 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் பஞ்சாப் தரப்பில் தொடக்க பேட்டா்களாக தலைவர் கேஎல் ராகுல், மயங்க் அகா்வால் ஆகியோா் களமிறங்கினா். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடியதால் பஞ்சாப் அணியின் ஸ்கோா் வேகமாக உயா்ந்தது. தலா 3 சிக்ஸா், பவுண்டரியுடன் 27 பந்துகளில் 40 ரன்களை விளாசிய மயங்க், மாயாஜால பவுலா் வருண் சக்கரவா்த்தி பந்தில் மொா்கனிடம் கேட்ச் தந்து வெளியேறினாா். அவருக்கு அடுத்து ஆட வந்த நிக்கோலஸ் பூரனும் 12 ஓட்டங்களே எடுத்த நிலையில், வருண் சக்கரவா்த்தி பந்துவீச்சில் சிவம் மவியிடம் கேட்ச் தந்து வெளியேறினாா்.

ராகுலும், எய்டன் மாா்க்ரமும் இணைந்து ஸ்கோரை உயா்த்த முயன்ற நிலையில், சுனில் நரைன் பந்தில், 18 ஓட்டங்களுடன் எய்டனும், சிவம் மவி பந்துவீச்சில் வெறும் 3 ஓட்டங்களுடன் தீபக் ஹூடாவும் அவுட்டாகி வெளியேறினா்.

மறுமுனையில் பொறுப்புடன் ஆடி வந்த கேப்டன் லோகேஷ் ராகுல் 2 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 55 பந்துகளில் 67 ஓட்டங்களை விளாசி, வெங்கடேஷ் ஐயா் பந்தில் அவுட்டானாா்.

9 பந்துகளில் 11 ஓட்டங்களை எடுக்க வேண்டிய நிலையில் பஞ்சாப் அணி இருந்த போது, லோகேஷ் ராகுல் அடித்த பந்தை திரிபாதி ஓடிச்சென்று கேட்ச் பிடித்தாா்,. ஆனால் கேட்ச் தெளிவாக தெரியாததால், டிவியில் பாா்த்த போது, பந்து முதலில் தரையில் பட்டது தெரியவந்தது. இதை அடுத்து ராகுல் நாட் அவுட் என அறிவித்தனா்.

ஷாருக் கான் 2 சிக்ஸா், 1 பவுண்டரியுடன் 22 ரன்களை விளாசி களத்தில் இருந்தாா். இறுதியாக ஷாரூக் அடித்த பந்தை எல்லைக் கோடு அருகே திரிபாதி கேட்ச் பிடித்த போதிலும், பந்தை வைத்திருக்க முடியாமல் கீழே விட்டதால், அது சிக்ஸராக மாறியது.

இதனால் கடைசி ஓவரில் 168/5 ஓட்டங்களைக் குவித்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது . கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்கரவா்த்தி 2 விக்கெட்டுகளையும், சிவம், சுனில், வெங்கடேஷ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினா்.

இந்த வெற்றி மூலம் பிளே ஆஃப் சுற்றில் நுழையும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது பஞ்சாப் அணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்