
உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சைகளில் சித்தியடைந்த 5,000 மாணவர்கள்
போதைப்பொருள் பாவனையுடனான குற்றச்சாட்டுக்களின் கீழ் சிறைச்சாலைகளில்
உள்ளார்கள்.
22 முதல் 30 வயதிற்குட்பட்ட இளம் தலைமுறையினர் தற்போது போதைப்பொருள்
பாவனைக்கு அடிமையாகியுள்ளமை நாட்டின் எதிர்காலத்திற்கு சிறந்த
எடுத்துக்காட்டாக அமையாது என மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்
ஜெனரால் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
போதைப்பொருள் வியாபாரம்,பாவனை மற்றும் பொலிஸ் சுற்றிவளைப்பு தொடர்பில்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
2021ஆம் ஆண்டு சமூக மட்டத்தில் ஹெரோயின் பாவனை குறைவடைந்து ஐஸ் ரக
போதைப்பொருள் பாவனை சடுதியாக உயர்வடைந்துள்ளது.
ஹெரோயின் போதைப்பொருளை காட்டிலும் ஐஸ் போதைப்பொருளின் விலை குறைவாக
உள்ளதுடன், எமது நாட்டில் ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக சட்டம்
கடந்த காலங்களில் இல்லாத காரணத்தினால் ஜஸ் போதைப்பொருள் பாவனை சடுதியாக
அதிகரித்துள்ளது. ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக மரண தண்டனை சட்டம்
அண்மையில் தான் இயற்றப்பட்டது.
2015ஆம் ஆண்டு பாடசாலை கல்வியை தொடராத 600 பேர் பேதைப்பொருள் பாவனையுடனான
குற்றச் செயல்களுடன் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்கள். இந்த
எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டு 190 ஆக குறைவடைந்தது, கடந்த காலங்களை
காட்டிலும் தற்போது படித்த இளம் தலைமுறையினர் போதைப்பொருள் பாவனை மற்றும்
அதனுடனான குற்றச் செயல்களினால் கைது செய்யப்பட்டு
தண்டனைக்குள்ளாகியுள்ளார்கள்.
2015ஆம் ஆண்டு உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சைகளில் சித்தியடைந்த
2,000 பேர் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடனான குற்றச் செயல்களில் கைது
செய்யப்பட்டு சிறையில் இருந்தார்கள். இந்த தொகை கடந்த ஆண்டு 5,000 ஆக
உயர்வடைந்துள்ளது.