4 நாட்களின் பின் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு!

ஆப்கானிஸ்தானின் ஜாபுல் மாகாணத்தின் ஷோகாக் கிராமத்தில் சமீபத்தில் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறு ஒன்று மூடாமல் இருந்து வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இந்த ஆள்துளை கிணற்றுக்கு அருகே விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

25 மீட்டர் ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் 10 மீட்டர் ஆழத்தில் சிறுவன் சிக்கிக்கொண்டான். இதை தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கயிறு கட்டி சிறுவனை மீட்க முயன்றனர். அவர்களின் இந்த முயற்சி பலனளிக்காமல் போனதோடு, அங்கு நிலைமையை மோசமாக்கியது. அதை தொடர்ந்து ஜே.சி.பி. உள்ளிட்ட இந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. ஆனாலும் மீட்பு குழுவினரால் சிறுவனை நெருங்க முடியவில்லை.

அதே சமயம் சிறுவன் சுயநினைவுடன் இருப்பதை உறுதி செய்ய, அவனது தந்தை சிறுவனிடம் பேச்சு கொடுத்தவாறு இருந்தார். சிறுவனும் தந்தையுடன் பேசி வந்தான். ஆனால் நேற்று முன்தினம் காலை முதல் சிறுவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

இந்த நிலையில் 4 நாள் போராட்டத்துக்கு பின் நேற்று மதியம் ஆழ்துளை கிணற்றில் இருந்து சிறுவன் மீட்கப்பட்டான். சிறுவனை காபூலில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல ஹெலிகொப்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்டதும், அவனை பரிசோதித்த வைத்தியர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் மீட்பு குழுவினரின் 4 நாள் போராட்டம் தோல்வியில் முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்