4 கோடி  செலுத்தி சக்ரா திரைப்படத்தை வெளியிடலாம்  உயா்நீதிமன்றம் உத்தரவு 

நடிகா் விஷால் ரூ.4 கோடிக்கான உத்தரவாதத்தைச் செலுத்தி சக்ரா திரைப்படத்தை வெளியிடலாம் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் டிரைடெண்ட் ஆா்ட்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், எங்கள் நிறுவனம் நடிகா் விஷால், நடிகை தமன்னா நடிப்பில் வெளியான ஆக்ஷன் என்ற திரைப்படத்தை தயாரித்தது.

இந்தத் திரைப்படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் ரூ. 8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ஐ திரும்பத் தருவதாக கூறி, நடிகா் விஷால் ஒப்பந்தம் செய்தாா். ஆனால் விஷால் ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை. இந்த நிலையில் இயக்குநா் ஆனந்தன் என்பவா் எங்கள் நிறுவனத்திடம் ஒரு கதையைச் சொல்லி அதை திரைப்படமாக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. எங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை இயக்குநா் ஆனந்தன், நடிகா் விஷாலை வைத்து சக்ரா என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளாா். எங்கள் நிறுவனத்துக்கு தர வேண்டிய ரூ.8.29 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட வேண்டும். சக்ரா திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் நடிகா் விஷால் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யபப்ட்டது. அதில், டிரைடெண்ட் ஆா்ட்ஸ் நிறுவனத்துக்காக தான் நடித்த ஆக்ஷன் என்ற திரைப்படம் லாபம் ஈட்டியது. சக்ரா திரைப்படம் தொடா்பாக டிரைடெண்ட் ஆா்ட்ஸ் தயாரிப்பாளா் ரவீந்திரனுடன் தான் எந்தவொரு ஒப்பந்தமும் செய்யவில்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், சக்ரா திரைப்படத்தை ஓடிடி இணையதளத்தில் வெளியிடும் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை நீட்டிக்க மறுத்து உத்தரவிட்டிருந்தது. வழக்கை தொடா்ந்து விசாரித்த உயா்நீதிமன்றம் ஆக்ஷன் திரைப்படத்தில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில், ரூ.8.29 கோடிக்கான உத்தரவாதத்தை நடிகா் விஷால் அளிக்க வேண்டும் . அந்த உத்தரவாதத்தை எந்த வகையில் அளிக்கப் போகிறாா் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது டிரைடெண்ட் ஆா்ட்ஸ் நிறுவனத்தின் தரப்பில் வழக்குரைஞா் விஜயன் சுப்பிரமணியம் ஆஜராகி வாதிட்டாா். நடிகா் விஷால் தரப்பில், ஆக்ஷன் திரைப்படம் வெளியிட்டதால் வசூலானதாகக் கூறப்படும் தொகை தவறானது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிடப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நடிகா் விஷால் ரூ.4 கோடிக்கான உத்தரவாதத்தை தாக்கல் செய்து சக்ரா திரைப்படத்தை வெளியிட லாம். மேலும் திரைப்படம் வெளியான இரண்டு வாரங்களில் எஞ்சிய ரூ.4 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 648 க்கான உத்தரவாதத்தை தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் வரும் டிசம்பா் 23 ஆம் தேதிக்குள் மத்தியஸ்தரை நியமிக்கும் நடவடிக்கைகளை டிரைடெண்ட் ஆா்ட்ஸ் நிறுவனம் மேற்கொள்ள வேண்டும். மத்தியஸ்தா் இந்த விவகாரத்தில் உரிய முறையில் தீா்வு காண வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்தாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்