
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில்
ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 24 இந்திய
மீனவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவானால் ஐந்து வருடங்களுக்கு
ஒத்திவைக்கப்பட்ட தலா ஒன்றரை வருடங்கள் சிறைத் தண்டனை என்ற நிபந்தனையில்
விடுதலை செய்யப்பட்டனர்.
ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் செ.கஜநிதிபாலன் முன்னிலையில் இதுதொடர்பான
வழக்கு, இன்று திங்கட்கிழமை (12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே
24 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் ஐந்து படகுகளைத் தொடர்ந்தும்
தடுத்து வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டதுடன் குறித்த படகுகளுக்கான
உரிமை கோரல் வழக்கினை எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதி விசாரணைக்கு
எடுத்துக் கொள்ளுமாறும் உத்தரவு பிறப்பித்தார்.
நவம்பர் மாதம் 28 ஆம் திகதி அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில்
நெடுந்தீவுக் கடற்பரப்பில் குறித்த 24 பேரும் இலங்கைக் கடற்படையினரால்
கைது செய்யப்பட்டிருந்ததுடன், மீன்பிடிக்குப் பயன்படுத்தப்பட்ட ஐந்து
படகுகளும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.