2024 இற்குள் அனைவருக்கும் நீரைப் பெற்றுக்கொடுக்க திட்டம் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனைவருக்கும் நீரை பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக களனி கங்கை வலது கரை நீர் விநியோக திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (2020.11.18) குறிப்பிட்டார்.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த கௌரவ பிரதமர் முதலில் நினைவு பலகையை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை செயற்படுத்தி, களனி கங்கை வலது கரை நீர் விநியோக திட்டத்தின் இரண்டாவது கட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த சந்தர்ப்பத்தில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் திரு.நிசாந்த ரணதுங்க அவர்களினால் 2021-2025 காலப்பகுதிக்கான நீர் வழங்கல் சபையின் குறிக்கோள் மற்றும் திட்டங்களை சுட்டிக்காட்டும் கூட்டுத்திட்டம் கௌரவ பிரதமரிடம் வழங்கப்பட்டது.

சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்திற்கு அமைய 2025 இற்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான திட்டத்திற்கு ஏற்ப இது செயற்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மக்கள் இதன் மூலம் பயனடைவதுடன், இந்த திட்டத்திற்காக செலவிடப்பட்ட மொத்த தொகை ரூபாய் 32 ஆயிரத்து 700 மில்லியன் ஆகும்.

இதன் மூலம் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய நீர் இணைப்புகளை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. இது 320 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 17 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு பயனளிக்கும்.

அங்கு உரையாற்றிய கௌரவ பிரதமரின் உரை வருமாறு,
இன்று எமக்கு முக்கியமானதோர் நாளாகும். இன்றுடன் ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்று ஒரு வருடம் பூரணமாகிறது. அரசாங்கத்தின் முதலாவது ஆண்டு என்பது நாட்டின் முக்கியமான காலமாகும் என கூற விரும்புகிறேன்.

2019 நவம்பர் மாதம் 17ஆம் திகதி எமக்கு மிகவும் கடினமானதொரு நாடே ஒப்படைக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு நாம் ஒப்படைத்த நாடு அல்ல 2019இல் ஒப்படைக்கப்பட்டது. நாம் அன்று ஒப்படைத்தது யுத்தம் நிறைவுசெய்யப்பட்ட நாட்டின் மூன்றில் ஒரு பங்கு சுதந்திரமான அனைத்து மக்களும் சுதந்திரமாக பயணிக்கக்கூடியதான ஒரு நாடு. நாட்டின் முக்கியத்துவத்தை வரலாற்று ரீதியில் மேலெழச் செய்தே 2015 இல் நாம் இந்த நாட்டை ஒப்படைத்தோம். புதிய துறைமுகம், புதிய விமான நிலையம், அதிவேக நெடுஞ்சாலை, நாடு முழுவதும் வீதிகள் அமைக்கப்பட்டு வரலாற்று ரீதியில் அபிவிருத்தியடைந்த நாடொன்றையே நாம் ஒப்படைத்தோம். அனைத்து விடயங்களிலும் தன்னிறைவு பெற்ற நாட்டையே நாம் ஒப்படைத்தோம். அத்துடன் 2020 இற்குள் நிறைவுசெய்ய தயாராக இருந்த பல பாரிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்திருந்த ஒரு நாட்டையே நாங்கள் 2015இல் ஒப்படைத்திருந்தோம்.

2015 அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்றவுடன் செய்தது நாம் 2020இல் நிறைவு செய்வதற்கு திட்டமிட்டிருந்த அனைத்து திட்டங்களையும் நிறுத்தியது ஆகும். நிறுத்தியது மாத்திரமன்றி, அதுவரை நாம் செய்திருந்த திட்டங்களின் மூலம் பழிவாங்கல்களை மேற்கொள்ள ஆரம்பித்தனர். எம்மை மாத்திரமன்றி நாம் கட்டியெழுப்பிய கட்டிடங்களையும் பழிவாங்கினர். மத்தல விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தினர். நாடு முழுவதும் நாம் நிறுவிய மஹிந்தோதய ஆய்வகங்களின் பெயர் பலகைகளை கழற்றி எறிந்தனர். சில இராணுவத்தினரை சிறையில் அடைத்து ராஜபக்ஷர்களை காட்டிக் கொடுத்தால் விடுதலை செய்கிறோம் எனும் அளவிற்கு சித்திரவதை செய்தனர். தாய் நாட்டை காப்பதற்காக போர் புரிந்த வீரர்களை குற்றவாளிகளாக நோக்கினர். இராணுவ வீரர்கள் எந்நேரத்தில் என்ன நேரும் என்ற அச்சத்தில் மறைந்து வாழ்ந்தனர். இதற்கு பிரதிபலன் கிடைத்தது. 2010ஆம் ஆண்டின் பின்னர் ஒரு குண்டேனும் வெடிக்காது பாதுகாக்கப்பட்ட நாட்டில் உயிர்த்த ஞாயிறன்று உலகுக்கே கேட்கும் வகையில் குண்டு வெடித்தது. அன்று அரசாங்கம் எந்தளவு பொறுப்பற்று செயற்பட்டது என்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு விசாரணைகளில் முன்வைக்கப்பட்ட சாட்சிகளின் மூலம் நாட்டிற்கு அறிய கிடைத்தது.

2015இல் ஒப்படைக்கப்பட்ட நாட்டைவிட பலவீனமடைந்த, அழிவடைந்த, பாதுகாப்பற்ற நாடொன்று 2020 இல் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது என்று கூறுவதற்கு அதுவே காரணம். தோல்வியடைந்த நாடொன்றே எமக்கு ஒப்படைக்கப்பட்டது. எனினும், நண்பர்களே 2015 இல் தொடர்ந்து நாம் ஆட்சி செய்திருந்தால் 2020இல் பல்வேறு இலக்குகள் எட்டப்பட்டு ஒரு முழுமையடைந்த நாடொன்றை கட்டியெழுப்பியிருப்போம் என்பதை நான் கூற விரும்புகிறேன்.

எங்களுக்கு இப்போது இரு தரப்பு பொறுப்பு உள்ளது. ஒன்று 2015 க்குப் பிறகு அழிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது. மற்றையது முழு உலகமும் எதிர்கொண்டுள்ள கொவிட்-19 நெருக்கடியை எதிர்கொண்டு இந்த நாட்டை முன்னோக்கி நகர்த்துவது ஆகும்.

கொவிட் -19 நெருக்கடியால் நாட்டிற்கு ஏற்பட்ட சேதம் போரினால் ஏற்பட்ட சேதத்தை விட தீவிரமானது.

வெளிநாடுகளில் பணி புரிபவர்களின் மூலமே இந்த நாட்டிற்கு மிகப்பெரிய வருமானம் கிடைத்தது. அவர்களிடமிருந்து மாதாந்தம் கிடைத்த வருமானம் நிறுத்தப்பட்டது மட்டுமல்லாமல், அவர்களை இலங்கைக்குக் அழைத்து வரவும் வேண்டி ஏற்பட்டது. இலட்சக் கணக்கானோர் வாழ்ந்த சுற்றுலாத் துறை முடங்கியுள்ளது. ஆடைத் கைத்தொழில் ஒரு வாரத்தில் பின்னோக்கி சென்றது. மீன்பிடித் துறை ஒரே இரவில் சரிந்தது. போக்குவரத்து சேவை சரிந்துவிட்டது, இவற்றில் தங்கி வாழ்ந்த  ஆயிரக்கணக்கான மக்கள் உதவியற்றவர்களாக மாறிவிட்டனர். வீதியோர விற்பனைகள் முதல் சூப்பர் மார்க்கெட் வரை அனைத்தும் செயலிழந்தன.

இவ்வாறானதொரு நிலையிலுள்ள நாட்டில் ஆண்டுக்கு ஒரு பில்லியன் டொலர் கடன் திருப்பி செலுத்த  வேண்டியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த பில்லியன் டொலர் கடனை எம்மால் திருப்பிச் செலுத்த முடியாது போகும் என்று எதிர்க்கட்சி நினைத்தது. அரசாங்க செலவினங்களைக் குறைத்தும், தேவையற்ற பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்தியதால் நாங்கள் அந்தக் கடனை செலுத்தினோம். இந்த பில்லியன் டொலர்களை அரசாங்கத்தால் செலுத்த முடியாது என்று அவர்கள் பந்தயம் கட்டினர். ஆனால் இந்த வருவாய் இழப்புகளின் மத்தியில்  அந்த ஒரு பில்லியன் டொலர் கடன் தவணையை சரியான நேரத்தில் செலுத்தினோம்.

வெளிநாடுகளில் பணி புரிவோரின் வருமான இழப்பு மற்றும் சுற்றுலா, மீன்வளம், போக்குவரத்து போன்றவற்றிலிருந்து அன்றாட வருமானம் அனைத்தையும் இழந்த போதிலும், ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான பி.சி.ஆர் சோதனைகளைச் செய்ய நூற்றுக்கணக்கான மில்லியன்களை ஒதுக்க வேண்டும். பிற நாடுகளில் போன்று ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழக்காது நோயாளிகளை காப்பாற்ற வேண்டியுள்ளது. அது மட்டுமல்லாமல், இந்த நாட்டில் உள்ள அனைத்து வர்த்தகங்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டியுள்ளது. 15 இலட்சம் அரசு ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்பட வேண்டும். அது மட்டுமல்லாமல், கையடக்க தொலைப்பேசிகளுக்கு விதிக்கப்படும் 25 வீத வரி முதல் மக்களை பாதிக்கும் 13 வகையான வரிகளை அறவிடாது, கருவூலத்திற்கு கிடைக்கும் அனைத்து வருவாய்களையும் விட்டுக்கொடுப்பதன் மூலம் மக்களுக்கு இதுபோன்ற நிவாரணங்களை வழங்க வேண்டியுள்ளது.

அப்படியிருந்தும், நாம் கடந்த காலத்தை குறை கூறவில்லை. கடந்து சென்ற ஆண்டுகளில் நாங்கள் எங்கள் எதிரிகளைப் பார்க்கவில்லை. நாங்கள் எங்கள் தைரியத்தை நோக்கி எங்கள் பலத்தையே பார்த்தோம்.

கொவிட் -19 தொற்றை ஒழிப்பதுடன், நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். காத்தாடியை வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்தனர். தும்புதடியையும் வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்தனர். நாம் இன்று அவை அனைத்தையும் நிறுத்தியுள்ளோம். களிமண் பானைகள், மஞ்சள் புதர்கள் முதல் டயர்கள் வரை அனைத்தையும் நம் நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டு மக்கள் தோல்வியுற்றவர்கள் என்றே எதிர்க்கட்சி எப்போதும் நினைத்திருந்தது. இந்த நாட்டு மக்கள் தோல்வியடைந்தவர்கள் என்று எண்ணியே அனைத்தையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தனர். நாடு தோல்வியடைந்ததாக எண்ணியே அனைத்து நிறுவனங்களையும் விற்பனை செய்தனர். எவ்வாறாயினும், நாங்கள் எங்கள் திட்டத்தை முன்னெடுத்துச் சென்று நல்லாட்சியில் தோல்வியுற்ற இந்த நாட்டு மக்களை வெற்றிபெறச் செய்வோம். நாங்கள் எங்கள் நாட்டிற்கு பெரும் வெற்றியைக் கொண்டு வருவோம். கடந்த ஆண்டுகளில் எத்தனை சிரமங்கள் காணப்பட்ட போதிலும் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளை  வழங்கும் திட்டத்தை நாங்கள் உருவாக்கினோம். இதன் கீழ் 34,000 பேருக்கு ஏற்கனவே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 60,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசு வேலைகளை வழங்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றினோம்.

2005 ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது எங்கள் முதல் ஆண்டு மிகவும் பொறுமையாக கடந்து சென்றது என்று எனக்கு நினைவிருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்குள் நாட்டை விடுவிக்கும் வேலைத்திட்டம் முதலாவது ஆண்டில் திட்டமிடப்பட்டது. அதைத்தான் நாங்கள் கடந்த ஆண்டு செய்தோம். 2005 ஐ விட மோசமான சூழ்நிலையை நாங்கள் எதிர்கொள்கிறோம். ஆனால் நாம் இப்போது ஒரு நாடாக சரியான முடிவை எடுத்துள்ளோம்.

எத்தகைய சிரமங்கள் காணப்படினும் யாருக்கும் அடிபணியாத ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப தைரியமாக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். போர்வீரர்களைத் தூண்டுவதற்காக துரோக சக்திகளால் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மனித உரிமைத் தீர்மானத்திலிருந்து நாங்கள் விலகினோம். எவ்வளவு சிரமப்பட்டாலும் நாட்டைக் காட்டிக் கொடுக்கவோ, தலைக்குனியவோ செய்யாத மக்களாக நாங்கள் முன்னேறி வருகிறோம். எனவே, நாங்கள் மிகவும் சரியான முடிவுகளை எடுத்து இந்த ஆண்டுக்குள் முன்னேறுவோம்.

இன்று அனைவருக்கும் தண்ணீர் வழங்கும் திட்டத்தை நாங்கள் தொடங்குகிறோம். அடுத்து முழு நாட்டு மக்களுக்கும் சுத்தமான குடிநீரை வழங்க விரும்புகிறோம். தற்போது நம் நாட்டில் சுமார் நாற்பது சதவீத மக்களுக்கு மட்டுமே குடிநீர் கிடைக்கிறது. ஐம்பத்து நான்கு சதவீதத்திற்கும் குறைவாக. ஆனால் 2021 க்குள் முழு நாட்டு மக்களுக்கும் குடிநீரை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். நேற்றைய வரவு செலவுத் திட்டத்தில் அதற்கென  ரூபாய் 1,000 பில்லியனை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். இலங்கை முழுவதும் 40,000 கி.மீ நீர் குழாய்களை நிறுவுவதற்கு உள்ளூர் பொறியாளர்களை நாங்கள் நியமிக்கிறோம். அந்தத் திட்டம் முந்தைய அரசாங்கம் செய்திருக்க வேண்டிய ஒன்று. ஆனால் நாங்கள் அவர்களைக் குறை கூறவில்லை. அந்த பொறுப்பை நாங்கள் நிறைவேற்றுவோம். 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள், அனைவருக்கும் தண்ணீர் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக நீர் வழங்கல் அமைச்சர் உள்ளிட்ட செயலாளர், தலைவர் மற்றும் பிற அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

14,000 வீடுகளை நிர்மாணிக்கும் ‘உங்களுக்கு வீடு, நாட்டிற்கு எதிர்காலம்’ என்ற திட்டத்தையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு தொகுதியிலும் 100 வீடுகளைக் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும். இவை 2015 ஆம் ஆண்டில் நாங்கள் மேற்கொள்வதற்காக பணம் செலவழித்த விடயங்களாகும்.

அவை கடந்த அரசாங்கம் நிர்மாணித்தது போன்று காடுகளில் அமைக்கப்படாது. வைத்தியசாலை, பாடசாலை, கடைகள் அனைத்தும் காணப்படும் ஒரு சூழலிலேயே அவை அமைக்கப்படும். அவை அமைக்கப்படுவது அந்த வீடுகளை கொள்வனவு செய்வோரை கடனாளிகளாக்கும் வகையிலும் இல்லை.

மேலும், நாம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்தும் திட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளோம்.

ஒரு அரசாங்கத்திற்கு முதலாவது ஆண்டு முக்கியமானதாகும். அது அந்த அரசாங்கம் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருக்க போகிறது என்ற காரணத்திற்காக அல்ல. எனவே, நாங்கள் அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தை எணாட்டு மக்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டே பணியாற்றுகின்றோம். நாம் பல சிரமங்களுக்கு மத்தியில் கடந்து வந்த ஒரு வருட காலம் போன்றே எதிர்காலத்தில் ஒவ்வொரு நாளையும் இந்நாட்டின் எதிர்காலாத்தை தீர்மானிக்கும் நாளாக கருதியே பணி செய்வோம். எமது பயணத்திற்கு இந்நாட்டு மக்கள் அன்றும் ஒத்துழைப்பு வழங்கினர். எதிர்காலத்திலும் அந்த ஒத்துழைப்பு கிடைக்கும் என நான் நம்புகின்றேன்.

கம்பஹா மாவட்டத்தில் வசிக்கும் உங்களது நீர் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது என்று நான் நம்புகின்றேன். அது நாம் பெற்ற வெற்றியாகும் என பிரதமர் குறிப்பிட்டார்.

குறித்த சந்தர்ப்பத்தில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவர்ட்டு, நீர்வழங்கல் துறை அமைச்சர் கௌரவ வாசுதேச நாணயக்கார, கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கௌரவ இராஜாங்க அமைச்சர்களான சனத் நிசாந்த, நிமல் லன்சா, லசந்த அழகியவன்ன, பிரசன்ன ரணவீர, இந்திய அநுருத்த, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹைன் பிரதீப், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் திரு.நிசாந்த ரணதுங்க, நீர்வழங்கள் துறை அமைச்சின் செயலாளர் பிரியத் பந்துவிக்ரம உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்