
பொருளாதார நெருக்கடியின் விளைவாக கடந்த 2022 ஆம் ஆண்டு சுமார் 7
மில்லியன் மக்கள் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் இருந்ததாகச்
சுட்டிக்காட்டியிருக்கும் யுனிசெப் அமைப்பு, கல்வி மற்றும் சிறுவர்
பாதுகாப்புசார் உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக இவ்வாண்டில் பெருமளவான
நிதி தேவைப்படுவதாகவும் தெரிவித்திருக்கின்றது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31 ஆம் திகதி
வரையான காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலைவரம் குறித்து
யுனிசெப் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள 11 பக்க அறிக்கையிலேயே
மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது,
பொருளாதார நெருக்கடியின் விளைவாக சுமார் 7 மில்லியன் மக்கள் மனிதாபிமான
உதவிகள் தேவைப்படும் நிலையில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின்
மனிதாபிமானத்தேவைகள் மற்றும் முன்னுரிமை செயற்திட்டம்
மதிப்பிட்டுள்ளது.மருந்து மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு,
உணவுப்பாதுகாப்பின்மை, மின்வெட்டு ஆகியவற்றால் சிறுவர்களுக்கான
அத்தியாவசிய சேவைகளான சுகாதாரம், போசணை மற்றும் கல்வி என்பன மிகமோசமாகப்
பாதிக்கப்பட்டுள்ளன எனவும் யுனிசெப் தெரிவித்துள்ளது