200 கோடி போதைப்பொருள் – 6 பாகிஸ்தானியர்களை குஜராத் கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர் 

குஜராத் நோக்கி வந்த பாகிஸ்தான் மீன்பிடிப் படகிலிருந்து ரூ.200 கோடி மதிப்பிலான 40 கிலோ எடை கொண்ட ஹெராயின் போதைப் பொருள் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. படகில் இருந்த 6 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரபிக் கடல் வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குஜராத் பகுதியில் கடலோரக் காவல் படை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் இணைந்து கட்ச் மாவட்டம், ஜாகெள துறைமுகம் அருகே கரையை நோக்கி வந்த பாகிஸ்தான் மீன்பிடிப் படகை கடலில் வழிமறித்து சோதனை நடத்தினர்.

சோதனையில், படகில் ரூ.200 கோடி மதிப்பிலான 40 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

விசாரணையில் போதைப்பொருள்கள் அனைத்தும் பாகிஸ்தானிலிருந்து அரபிக் கடல் மூலம் குஜராத் கொண்டுவந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக பஞ்சாப் மாநிலத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டது தெரியவந்தது.

இதையடுத்து போதைப் பொருளைப் பறிமுதல் செய்த போலீஸார் படகில் வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 6 பேரைக் கைது செய்தனர்.

பின்னர் அவர்களையும் மீன்பிடிப் படகையும் ஜாகெள துறைமுகத்துக்கு கொண்டுவந்தனர்.

குஜராத் கடற்கரை வழியாக இந்தியாவுக்குள் போதைப் பொருள்களைக் கடத்திச் செல்ல முயன்ற சம்பவங்கள் பலமுறை நிகழ்ந்துள்ளன. இந்தக் கடத்தல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு பல வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்