2 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யும் டிரம்ப்!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 40 லட்சத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல் கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை தான் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது இதுகுறித்து அவர் கூறுகையில் “ நான் தொடர்ச்சியாக கொரோனா பரிசோதனை செய்கிறேன். சராசரியாக 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனைக்கு என்னை உட்படுத்திக் கொள்கிறேன்” எனக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது “நான் எப்போதும் முகக்கவசம் வைத்திருப்பேன். ஆனால் எப்போது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது சாத்தியம் இல்லாமல் போகிறதோ அப்போது மட்டுமே முகக்கவசத்தை பயன்படுத்துவேன். மக்களும் அதைப் போலவே தேவைப்படும்போது மட்டும் முகக்கவசத்தை பயன்படுத்த அறிவுறுத்துகிறேன்” என டிரம்ப் பதிலளித்தார்.

மேலும் அவர் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவதற்கு முன்பு அது மிகவும் மோசம் அடையும் என எச்சரிக்கை விடுத்தார்.

அதேசமயம் கொரோனாவுக்கான தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் இறப்பு மற்றும் பாதிப்பு விகிதம் குறையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தப் பேட்டியின் போது டிரம்ப் கொரோனா வைரசை மீண்டும் சீனா வைரஸ் என குறிப்பிட்டார்.

முகநூலில் நாம்