2 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் பிரபல பாடகர் எஸ்பிபி உடல் அடக்கம்:

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த திரையுலகினர், பொதுமக்கள் திரண்டனர். பிரபல பின்னணி பாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5ம் தேதி சென்னை சூளைமேட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திடீரென அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. நுரையீரல் பாதிக்கப்பட்டதால் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவமனை தெரிவித்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 24ம்தேதி மாலை மீண்டும் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமானார். இந்த தகவலை அறிந்து திரையுலகினரும் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடல் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் நுங்கம்பாக்கம் வீட்டிலிருந்து திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு இரவு 10.45 மணிக்கு உடல் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே எஸ்.பி.பியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் இரவு அறிவித்தார்.

தாமரைப்பாக்கத்தில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஊர் மக்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு நிலவியது. ஆனால் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த போலீசார் தடை விதித்தனர். இதனிடையே நேற்று அதிகாலை 5 மணி முதல் பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், எஸ்பி அரவிந்தன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். ஆந்திர நீர்வளத்துறை அமைச்சர் அனில்குமார் யாதவ், பூந்தமல்லி தொகுதி திமுக எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, திருப்பதி தொகுதி எம்எல்ஏ கருணாகரரெட்டி, நெல்லூர் தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணா ரெட்டி, தடா தொகுதி எம்எல்ஏ சஞ்சீவி, நடிகர்கள் அர்ஜுன், ரகுமான், சமுத்திரக்கனி, மயில்சாமி, வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சின்னத்திரை நடிகர் சுதாகர், கல்யாணமாலை மோகன், திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, இசையமைப்பாளர்கள் தீனா, தேவி பிரசாத், இயக்குனர் அமீர், பாடகர் மனோ, தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் மற்றும் வடக்கு மண்டல ஐஜி நாகராஜன், டிஐஜி சாமூண்டீஸ்வரி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

ஆந்திரா மாநிலம் நகரியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வாகனத்தில் வந்து அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 10.30 மணி வரை தாமரைப்பாக்கம் கூட் சாலையில் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். அப்போது, முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முககவசம் மற்றும் சானிடைசர் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது மகன் எஸ்பிபி. சரண், மனைவி சாவித்திரி, மகள் பல்லவி, சகோதரி சைலஜா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அதற்கு பிறகு உடல் அடக்கம் செய்வதற்கான சடங்குகள் நடந்தது.  எஸ்.பி.பி.சரண் இறுதி சடங்குகளை செய்தார். பின்னர் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பகல் 12 மணிக்கு எஸ்பிபி உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, அங்கிருந்த பொதுமக்கள், ரசிகர்கள் கண்ணீர்மல்க, அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

எஸ்.பி.பி உடலுக்கு நடிகர் விஜய் அஞ்சலி
சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வீட்டில் எஸ்.பி.பியின் உடல் வைக்கப்பட்டிருந்தபோது, திரையுலகை சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே அஞ்சலி செலுத்த வந்திருந்தனர். பின்னர் தாமரைப்பாக்கத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதலில் அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை என கூறப்பட்டது. பிறகு திடீரென நேற்று அதிகாலை அனுமதி வழங்கப்பட்டது. இதை கேள்விப்பட்டு, திரையுலகை சேர்ந்த பலர் நேற்று காலை முதல் தாமரைப்பாக்கத்துக்கு வர ஆரம்பித்தனர். அங்கு அவர்கள் எஸ்.பி.பியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதேபோல் அரசியல் பிரமுகர்களும் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் தாமரைப்பாக்கம் பண்ணை தோட்டத்தில் எஸ்.பி.பியின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்று வந்தது. அப்போது பகல் 11.50 மணியளவில் அங்கு நடிகர் விஜய் காரில் வந்தார். எஸ்.பி.பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அவர், எஸ்.பி.பி.சரணை கட்டியணைத்து ஆறுதல் கூறினார். சிறிது நேரம் அங்கிருந்த விஜய், பின்னர் புறப்பட்டு சென்றார். அப்போது விஜய்யை பார்க்க அங்கு கூட்டம் சேர்ந்துவிட்டது. இதையடுத்து போலீசார் வந்து அவர்களை அப்புறப்படுத்தி விஜய்யை அனுப்பி வைத்தனர்.

துயரத்தில் தவிக்கிறேன்: பாடகி ஜானகி
எஸ்.பி.பி குறித்து பாடகி எஸ்.ஜானகி கூறியதாவது: ஆந்திராவில் நடந்த இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி.யை முதலில் சந்தித்தேன். சிறுவனாக இருந்த அவர் திறமையாக பாடினார். பெரிய பாடகராக உயர்வாய் என வாழ்த்தினேன். பின்னாளில் சிறந்த பாடகராக உயர்ந்தார். 1980, 1990களில் ஒரே நாளில் நாங்கள் பல பாடல்களை பாடினோம். அக்காலத்தில் நாங்கள் சந்திக்காத நாட்கள் குறைவு. காமெடி செய்து ரிக்கார்டிங் மையத்தை கலகலப்பாக வைத்திருப்பார். அதெல்லாம் பசுமையான நினைவுகள். என் மீது அதிக அன்பு கொண்டவர். நான் நடுவராக கலந்துகொண்ட அந்த இசை நிகழ்ச்சி குறித்து மறக்காமல் சொல்வார். அவரது மறைவு தகவலை அறிந்த தருணம் முதல் என் மனநிலை இயல்பாக இல்லை. மனம் விவரிக்க முடியாத துயரத்தில் தவிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்றார்.

ரசிகரின் செருப்பை எடுத்து கொடுத்தார்
எஸ்.பி.பி உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு விஜய் செல்லும்போது, அவருடனே ரசிகர்கள் பலர் ஓடிவந்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஒரு ரசிகரின் செருப்பு கழன்று விஜய்க்கு முன்பாக சாலையில் விழுந்தது. அப்போது சற்றும் யோசிக்காமல் கீழே குனிந்து அந்த செருப்பை எடுத்து அந்த ரசிகரிடம் கொடுத்தார் விஜய். அவரது இந்த செயலை பார்த்து ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

சங்கீதம் படிக்காத ஞானி: யேசுதாஸ் பாடகர் யேசுதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:
பாலு என்னுடைய உடன்பிறந்தவர் போன்றவர். முன் ஜென்மத்தில் நானும் எஸ்பிபி அவர்களும் சகோதர்களாக இருந்திருக்கலாம். பாலு முறையாக சங்கீதம் கற்கவில்லை என்றாலும் அவருடைய சங்கீத ஞானம் பெரிய அளவில் இருக்கும். பாட்டு பாடவும் செய்வார், உருவாக்கவும் செய்வார். சிகரம் படத்தில் பாடிய ‘அகரம் இப்போ சிகரம் ஆச்சு’ என்ற பாடல் பாலுவுக்கு பரிசாக பாடினேன் என்று கூறினார். யாரையும் புண்படுத்தமாட்டார். கூட இருக்கும் எல்லோரையும் அன்பாகவும் ஆதரவாகவும் பார்த்துக்கொள்வார். நாங்கள் கடைசியாக பாடியது ஒரு சிங்கப்பூர் நிகழ்ச்சியில்தான். இந்த கொரோனாவால் நமக்கு ஒரு பெரிய இழப்பு நடந்துள்ளது. நான் அமெரிக்காவில் இருந்து இங்கே வர அனுமதி இல்லை. என்னால் அவரை பார்க்க முடியவில்லை என்று வருத்தமாக இருக்கிறது. என்றும் அவர் நினைவுகளுடனே இருப்பேன்.

ஜெய்ப்பூர் படப்பிடிப்பில் அஞ்சலி
விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா உள்ளிட்டோர் நடிக்கும் அனபெல் சுப்பிரமணியம் படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இந்த படத்தை தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார். இவர் இயக்குனரும் நடிகருமான கே.சுந்தர்ராஜனின் மகன். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு செய்தி கேட்டு படப்பிடிப்பில் இருந்த குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நேற்று சிறிது நேரம் படப்பிடிப்பை நிறுத்திய அவர்கள், எஸ்.பி.பியின் புகைப்படத்தை படப்பிடிப்பு தளத்தில் வைத்து மவுன அஞ்சலி செலுத்தினர். அப்போது விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா மற்றும் படக்குழுவினர் இருந்தனர்.

‘உன்னை விட்டு எப்படி இருப்பேன்’
கொரோனா நோய் பாதித்ததும் மருத்துவமனைக்கு செல்லும் முன்பாக, ‘உன்னை விட்டு பிரிந்து எப்படி இருக்க போகிறேனோ’ என சோகத்துடன் தனது மனைவி சாவித்திரியிடம் கூறியிருக்கிறார் எஸ்.பி.பி. அத்துடன், ‘நான் திரும்பி வருவேனோ, வராமல் போய்விடுவேனோ தெரியவில்லை. நான் மீண்டு வராவிட்டால் எந்த சூழ்நிலையிலும் நீ உடைந்து போய்விடக்கூடாது’ என்று கண்ணீருடன் பேசியுள்ளார். கல்லூரி காலத்தில் சாவித்திரியை காதலித்து எஸ்.பி.பி மணந்தார். இந்த காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதையும் மீறி அவரை கரம் பிடித்திருக்கிறார்.

பாடும் நிலா எப்போதும்  ஒளி வீசிக்கொண்டிருக்கும்: எஸ்பிபிக்கு சோனியா காந்தி புகழஞ்சலி
காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி இரங்கல் கடிதம் ஒன்றை எஸ்பிபியின் மகன் எஸ்பி சரணுக்கு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, கொரோனா வைரஸுடன் தைரியத்துடன் போராடிய எஸ்பிபியின் மறைவு செய்தி கேட்டு வேதனையடைந்தேன். இந்தியாவின் உயர்ந்த இசை மற்றும் மொழியியல் கலாசாரத்தின் பிரகாசமான அடையாளமாக திகழ்ந்தவர் அவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் உணர்வுப்பூர்வமான பாடல்களைப் பாடியவர். லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு தனது குரலால் மகிழ்ச்சியையும், ஆறுதலையும் வழங்கியவர். அவரது மறைவால் கலை மற்றும் கலாசார உலகம் இருண்டுவிட்டது. பாடும் நிலா என்றழைக்கப்பட்ட அந்த நிலவின் பிரகாசம் எப்போதும் நம்மிடம் ஒளி வீசிக் கொண்டிருக்கும்.

எஸ்.பி.பியின் குரலை கேட்பது பிடிக்கும்
சச்சின் டெண்டுல்கர், டிவிட்டரில் கூறும்போது, ‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் இசையைக் கேட்பது எப்போதும் எனக்கு பிடிக்கும். அவரது மறைவால் ஆழ்ந்த வருத்தம். சாகர் திரைப்படத்தில் இடம்பெற்ற அவருடைய ‘சச் மேரே யார் ஹை’ பாடல் எனது பிளேலிஸ்ட்டில் நான் எப்போதும் வைத்திருக்கும் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று. அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.

கதறியழுத மனோ
தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் உள்ள எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு அவரது நண்பரும் பாடகருமான மனோ நேரில் அஞ்சலி செலுத்தினார். நெஞ்சில் அடித்துக்கொண்டப் படியே கண்ணீர் விட்டு கதறினார் மனோ. குழந்தையை போல் தேம்பி தேம்பி அழுத அவரை இசையமைப்பாளர் தீனா, அணைத்தப்படி ஆறுதல் கூறினார்.

சிவன் கோயில் அருகே…
தாமரைபாக்கத்தில் உள்ள சிவன் கோயில் அருகில்தான் எஸ்பிபி.யின் பண்ணை வீடு உள்ளது. இந்த கோயில் அருகே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ‘எஸ்பிபி, ஏராளமான சிவன் பாடல்கள் பாடியுள்ளதால் அவருக்கு சிவன் கோயில் அருகே அவரது உடலை அடக்கம் செய்யும் பாக்கியம் கிடைத்துள்ளது’ என்று பொதுமக்கள் உருக்கமாக கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்