
அமெரிக்கப் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், அப்பல்கலைக்கழகத்தில் புதிதாக இணைந்த 18 வயது மாணவி ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார். வெஸ்ட் ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சர்ட் சிக்மன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் அனா ஜோன்ஸ் எனும் 18 வயது மாணவியை சுட்டுக் கொன்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளர். இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இம்மாணவியுடன் பேராசிரியருக்கு மோதல் எதுவும் இருந்ததாக தெரியவில்லை. வேறொரு நபருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து, கார் ஒன்றை நோக்கி பேராசிரியர் சிக்மன் துப்பாக்கி சூடு நடத்தினார். அக்காருக்குள்ளிருந்த மாணவி அனா ஜோன்ஸ் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.
உணவு விடுதியொன்றின் வளாகத்தில் வைத்து, தன்னை சுடப்போவதாக பேராசிரியர் சிக்மன் அச்சுறுத்தினார் என அங்குள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு நபர் ஒருவர் தெரிவித்தார்.
அப்போது சிக்மனிடம் சென்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சிக்மனின் கையில் ஆயுதம் இருப்பதைக் கண்டனர். அவரை அங்கிருந்து செல்லுமாறு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உத்தரவிட்டனர்.
அதையடுத்து, அங்கிருந்து நகர்ந்து வாகனத் தரிப்பிடத்தை நோக்கி நடந்த சிக்மன், நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றை நோக்கி துப்பாக்கியால் சுட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இதன்போது காருக்குள் இருந்த மாணவி அனா ஜோன்ஸ் படுகாயமடைந்தார். நண்பர்களால் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் இறந்துவிட்டார் என அறிவிக்கப்பட்டது.
இச்சம்பவத்தையடுத்து பேராசிரியர் ரிச்சர்ட் சிக்மன் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை, அவரை பணியிலிருந்து நீக்கியுள்ளதாக வெஸ்ட் ஜோர்ஜியா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.