12-வது வீரராக ஆடினாலும் அவரால் சதம் அடிக்க முடியும் – தவான்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மென்களில் ஒருவர் லோகேஷ் ராகுல். சமீப காலமாக அவர் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

27 வயதான ராகுல் நியூசிலாந்துக்கு எதிராக சமீபத்தில் நடந்த ஒருநாள் தொடரில் 1 சதம், 1 அரை சதத்துடன் 204 ரன்கள் குவித்தார். இதேபோல 20 ஓவர் தொடரில் 2 அரை சதத்துடன் 224 ரன்கள் எடுத்தார்.

இதற்கு முந்தைய ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம் ஆகிய தொடர்களிலும் அவர் சாதித்து இருந்தார். குறைந்த பட்சம் 1 அரை சதத்தையாவது எடுத்து அவர் தனது திறமையை வெளிப்படுத்திருந்தார். தொடக்க வீரர் வரிசையில் ராகுல் அதிரடியாக விளையாடியதால் வழக்கமாக தொடக்கத்தில் களம் இறங்கும் ஷிகர்தவானுக்கு நெருக்கடி ஏற்பட்டது. காயத்தால் அவர் ஆடாதபோது அந்த இடத்தில் ராகுல் அபாரமாக விளையாடினார்.

இந்த நெருக்கடி காரணமாக தவான் ஆஸ்திரேலிய தொடரில் தனது திறமையை வெளிப்படுத்தினார். இதனால் ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடினார். 5-வது வரிசையில் களம் இறங்கி அதிலும் அவர் சாதித்தார். நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 5-வது வீரராக களம் இறங்கி சதம் அடித்து முத்திரை பதித்தார்.

இந்தநிலையில் லோகேஷ் ராகுலின் ஆட்டத்தை தவான் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது:-

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ராகுல் 5-வது வீரராக களம் இறங்கி ஆடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சதம் அடித்தது பிரமாதமானது. சிறப்பாக விளையாடி வரும் அவருக்கு எனது பாராட்டுக்கள்.

அவர் தனது பேட்டிங் வலிமையை தொடர்ந்து தக்க வைத்துள்ளார். 12-வது வீரராக களம் இறங்கினால் கூட ராகுலால் சதம் அடிக்க முடியும். இவ்வாறு தவான் கூறி உள்ளார்.

ராகுல் 36 டெஸ்டில் விளையாடி 2006 ரன் எடுத்துள்ளார். இதில் 5 சதமும், 11 அரைசதமும் அடங்கும். ஒருநாள் போட்டியில் 31 இன்னிங்சில் 1229 ரன்னும் (4 சதம், 7 அரை சதம்), 20 ஓவர் ஆட்டத்தில் 38 இன்னிங்சில் 1461 ரன்னும் (2 சதம், 11 அரை சதம்) எடுத்துள்ளார்.

முகநூலில் நாம்