10 முடிந்தது, இன்னும் 10 வருடம் இருக்கலாம்- கிரிக்கெட் அறிமுக போட்டோவை வெளியிட்டு ஸ்மித் தகவல்!

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக இருக்கும் ஸ்டீவ் ஸ்மித் கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் விளையாடிய காலத்தில் 2010-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். ரிக்கி பாண்டிங்கிடம் இருந்து க்ரீன் தொப்பியை பெற்றுக் கொண்டார்.

பாகிஸ்தானுக்கு எதிரான அறிமுக போட்டியில் 8 மற்றும் 9-வது நபராக களம் இறங்கி முறையே 1 மற்றும் 12 ரன்கள் அடித்தார். 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். ஆரம்ப காலத்தில் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக அறியப்பட்ட ஸ்மித், அதன்பின் தன்னை தலைசிறந்த பேட்ஸ்மேனாக வளர்த்துக் கொண்டார். இந்த காலக்கட்டத்தில் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

இன்றோடு ஸ்மித் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி 10 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. கிரிக்கெட்டில் இன்னும் 10 ஆண்டுகள் விளையாடலாம் என 31 வயதாகும் ஸ்டீவ் ஸ்மித் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித் அறிமுக போட்டியில் தொப்பியை ரிக்கி பாண்டிங்கிடம் இருந்து வாங்கும் படத்தை வெளியிட்டு ‘‘நான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி 10 வருடங்கள் ஆகிவிட்டது என்பதை நம்புவதற்கு கடினமாக உள்ளது. தற்போது வரை மிகவும் அற்புதமான பயணம். எனக்கு இன்னும் 10 வருடங்கள் இருக்கலாம்?’’ எனப் பதிவிட்டுள்ளார்.

முகநூலில் நாம்