07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் பெய்து வரும் மழை காரணமாக 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்று (01) காலை 11 மணி முதல் இன்று (02) முற்பகல் 11 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் நிலவும் காலநிலையை கருத்திற்கொண்டு அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நில்வலா ஆற்றின் தாழ்வான பகுதிகளில் கணிசமான அளவு வெள்ளம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த 24 மணித்தியாலங்களில், பஸ்கொட, கொட்டபொல, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, திஹகொட, மாத்தறை, கம்புருபிட்டிய, முலட்டியன மற்றும் தெவிநுவர ஆகிய பிரதேச மக்களுக்கும் இதே எச்சரிக்கையை நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ளது.

கெஹல்கமுவ ஓயா, மகாவலி, களனி, நில்வலா மற்றும் களுகங்கை ஆகியன சில பிரதேசங்களில் பெருக்கெடுக்கும் மட்டத்தை எட்டியுள்ளதால், அதனை சுற்றியுள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளையும் இன்று (02) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பிரதேசத்தில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என அதன் பிரதிப் பணிப்பாளர் மெரில் மென்டிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்