ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு அலுவலகத்தை திறந்தது சீனா!

சீனாவின் கட்டுபாட்டில் தன்னாட்சி பெற்ற பகுதியாக இருந்த ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாக நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக ஹாங்காங்கில் குற்ற வழக்கில் கைது செய்யப்படுபவர்களை சீனாவுக்கு நாடுகடத்தும் சட்டத்திற்கு எதிராகவும், ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தியும், சீனாவுக்கு ஆதரவான ஹாங்காங் அரசு பதவி விலக வலியுறுத்தியும் போராட்டங்கள் நடந்தன.

இந்த போராட்டத்தை ஒடுக்கும் விதமாக ஹாங்காங்கின் சட்ட மற்றும் ஆட்சியமைப்பில் மாற்றங்கள் செய்வதற்கான, சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா நிறைவேற்றியது.

ஹாங்காங்கின் பாதுகாப்பு மற்றும் ஆட்சி அதிகாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தால் ஹாங்காங்கின் சுதந்திர சுயாட்சி முடிவுக்கு வந்துவிட்டதாக பல ஜனநாயக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சட்டத்தின் முக்கிய அம்சமாக ஹாங்காங் அரசின் அனுமதி இல்லாமல் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை சீனா நேரடியாக மேற்கொள்ளலாம்.

இதற்காக சிறப்பு அதிகாரிகளை ஹாங்காங்கில் சீனா நியமணம் செய்துள்ளது. குறிப்பாக சீனாவின் தேசிய பாதுகாப்பு அலுவலகம் ஒன்று ஹாங்காங்கில் ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சீன தேசிய பாதுகாப்பு அலுவலகத்தை ஹாங்காங்கில் அதன் நிர்வாகம் இன்று திறந்து வைத்துள்ளது. ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லேம் மற்றும் முக்கிய அதிகாரிகள் அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முகநூலில் நாம்