
ஸ்பெய்னின் வட பிராந்தியத்திலுள்ள கட்டலோனியா மாகாணத்தின் கிரோனோ பகுதியில் மழையுடன் பாரிய ஆலங்கட்டிகள் வீழ்ந்தன

டென்னிஸ் பந்து அளவிலான அதாவது சுமார் 10 சென்ரிமீற்றர் (4 அங்குலம்) விட்டமுடைய ஆலங்கட்டிகளும் வீழ்ந்ததாக அம்மாகாண வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
லூ பிஸ்பால் டி எம்போர்டா எனும் கிராமத்தில் பாரிய ஆலங்கட்டி வீழ்ந்ததால் 20 மாத குழந்தையொன்று காயமடைந்தது.
கிரோனா நகரிலுள்ள வைத்தியசாலைக்கு இக்குழந்தை அவசரமாக கொண்டு செல்லப்பட்டது. எனினும், சில மணித்தியாலங்களின் பின்னர் இக்குழந்தை உயிரிந்தது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இக்குழந்தையின் தலையில் ஆலங்கட்டி வீழ்ந்ததாக நகர சபை உறுப்பினர் கார்மே வால் தெரிவித்துள்ளார்.
’10 நிமிடங்கள் தான் ஆலங்கட்டி மழை பெய்தது. ஆனால், 10 நிமிடங்களும் பயங்கரமானது என அவர் கூறினார்.
’11 சென்ரிமீற்றர் (4 அங்குலம்) விட்டமுடைய ஆலங்கட்டியும் வீழ்ந்தது. மழை குறைவாகவே பெய்தது. ஆலங்கட்டிகளே வீழ்ந்தன’ எனவும் கார்மே வால் கூறினார்.
ஆலங்கட்டிகள் வீழ்ந்ததால் சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாரிய ஆலங்கட்டிகள் வீழ்ந்ததால் பல வீடுகளின் கூரைகள், ஜன்னல்கள், வாகனங்களின் கண்ணாடிகளும் சேதமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேற்படி சம்பவம் ஒரு பேரிடர் என கட்டலோனியா ஜனாதிபதி பியர்அராகோன்ஸ் கூறியுள்ளார்.
கடந்த 20 வருட காலத்தில் கட்டலோன் பிராந்தியத்தில் ஏற்பட்ட கடும் ஆலங்கட்டி மழைவீழ்ச்சி இதுவாகும் என அப்பிராந்திய வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உலக வரலாற்றில், ஆலங்கட்டி மழையினால் அதிக உயிரிழப்புகள் பதிவாகிய சம்பவம் 1888 ஆம் ஆண்டு இந்தியாவின் உத்தர பிரதேசத்திலுள்ள மோராதாபாத் நகரில் இடம்பெற்றது. அப்போது தோடம்பழ அளவிலான ஆலங்கட்டி மழை பெய்த நிலையில் சுமார் 250 பேர் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வரலாற்றில் பதிவாகிய மிகப் பெரிய அளவிலான ஆலங்கட்டி 2010 ஆம் ஆண்டு அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாநிலத்தின் விவியன் நகரில் வீழ்ந்தது. சுமார் 8 அங்குலம் விட்டமுடைய அந்த ஆலங்கட்டி 878 கிராம் எடையுடையதாக இருந்தது.