
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பேசியதாவது:-
கடந்த 32 ஆண்டுகளாக தமிழகத்தில் திராவிட கட்சிகளே மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க.வினர் அடுத்தடுத்து தங்களது குடும்பம் மட்டுமே ஆள வேண்டும் என நினைக்கின்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது. 2 கட்சி ஆட்சியையும் பார்த்து விட்டீர்கள். தற்போது நடக்கிற தேர்தல் மாற்றத்துக்கான தேர்தல். மாற்றத்தை நீங்கள்தான் தர வேண்டும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவரவர் ஊரிலேயே வேலை வாய்ப்பை உருவாக்கி தருவேன். விவசாயத்துக்கு முன்னுரிம கொடுத்து ஏற்றுமதியை அதிகரிப்பேன். ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி படிப்பு வரையிலும், தரமான மருத்துவம் இலவசமாக வழங்கப்படும்.
சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். மதுக்கடைகளுக்கு பதிலாக பழச்சாறு கடைகள் அமைக்கப்படும். தோற்றுக் கொண்டே இருந்தாலும் ஆட்சியில் அமரும் காலம் வரும் என்ற நம்பிக்கையில் உங்களை நோக்கி வந்துள்ளேன். மாறி மாறி திராவிட கட்சிகளுக்கு வாக்களித்த நீங்கள் எங்களுக்கும் ஒரு முறை வாய்ப்பளிக்க வேண்டும்.