ஷெல்டன் காட்ரெல்லின் சாதனை சிக்சரால் வெஸ்ட் இண்டீஸ் 1 விக்கெட்டில் த்ரில் வெற்றி

அயர்லாந்து அணிக்கெதிரான 2-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று பிரிட்ஜ்டவுனில் நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 237 ரன்கள் அடித்தது. பின்னர் 238 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் 76 ரன்னுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது.

அதன்பின் நிக்கோலஸ் பூரன் (52), பொல்லார்டு (40) அணியை சரிவில் இருந்து மீட்டனர். என்றாலும் 140 ரன்கள் இருந்தபோது பூரனும், 142 ரன்கள் இருந்த போது பொல்லார்டும் ஆட்டமிழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் மேலும் பின்னடைவை சந்தித்தது. அதன்பின் வந்த வால்ஷ் சிறப்பாக விளையாடினார். அவருக்கு பியர் (18), ஜோசப் (16) ஒத்துழைப்பு அழைத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட்டுக்களை இழந்து 47.4 ஓவரில் 232 ரன்கள் எடுத்திருக்கும்போது கடைசி விக்கெட்டுக்கு வால்ஷ் உடன் காட்ரெல் ஜோடி சேர்ந்தார். அப்போது 16 பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரில் ஐந்து ரன்கள் தேவைப்பட்டது. முதல் இரண்டு பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 3 மற்றும் 4-வது பந்தில் அயர்லாந்துக்கு ரன்அவுட் வாய்ப்பு இருந்தது. இரண்டையும் தவறவிட்டனர்.

ஐந்தாவது பந்தை காட்ரெல் சிக்சருக்கு தூக்க வெஸ்ட் இண்டீஸ் 49.5 ஓவரில் 242 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

சிக்ஸ் அடித்த காட்ரெல் 11-வது வீரராக களம் இறங்கினார். 11-வது இடத்தில் களம் இறங்கிய வீரர் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைப்பது ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவே முதல்முறையாகும்.

முகநூலில் நாம்