ஷமியின் கடைசி ஓவரால் வெற்றி கிடைத்தது- ரோகித் சர்மா சொல்கிறார்

சூப்பர் ஓவரில் நான் அடித்த 2 சிக்சரை விட முகமது ஷமியின் கடைசி ஓவரால் தான் வெற்றி கிடைத்தது என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

நியூசிலாந்து மண்ணில் 20 ஓவர் தொடரை இந்திய அணி முதன்முறையாக கைப்பற்றி முத்திரை பதித்தது.
ஹேமில்டனில் நடந்த 3-வது 20 ஓவர் போட்டியில்  முதலில் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்தது.  ரோகித்சர்மா 40 பந்தில் 65 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் வீராட் கோலி 27 பந்தில் 38 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். 

பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணியும், 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்னே எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டம் டையில் முடிந்தது. முகமது ஷமி கடைசி ஓவரை சிறப்பாக வீசியதால் ஆட்டம் டை ஆனது. வில்லியம்சன் 48 பந்தில் 95 ரன் எடுத்தார். இதில் 8 பவுண்டரியும் 6 சிக்சரும் அடங்கும். 


வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்ய சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.  இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து 17 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 20 ரன் எடுத்து சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றது. கடைசி 2 பந்தில் ரோகித் சர்மா 2 சிக்சர்களை விளாசி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.


இந்த வெற்றி மூலம் இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக  20 ஓவர் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. 5 போட்டி கொண்ட தொடரில் ஏற்கனவே முதல் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது. 2009-ம் ஆண்டு நியூசிலாந்து பயணத்தின் போது 0-2 என்ற கணக்கிலும், கடந்த ஆண்டு 1-2 என்ற கணக்கிலும் 20 ஓவர் தொடரை இழந்து இருந்தது.

3-வது முறையாக அந்நாட்டில் விளையாடிய போது தொடரை கைப்பற்றி சாதித்துள்ளது.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். வெற்றி குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சூப்பர் ஓவரில் இதற்கு முன்பு நான் பேட்டிங் செய்தது இல்லை. இதுஎனது முதல் சூப்பர் ஓவர் ஆகும். எதை எதிர்பார்ப்பது என்று தெரியவில்லை.  முதலில் 1 ரன் எடுத்து விட்டு கடைசி 3 பந்தில் அடிக்க வேண்டுமா? அல்லது முதல் பந்தில் இருந்தே அதிரடியாக ஆட வேண்டுமா? என்பன எல்லாம் புதிராக இருந்தன.  

சூப்பர் ஓவரில் தொடர்ந்து ஆடி பந்து வீச்சாளரின் ஒரு தவறுக்காக காத்திருந்தேன். சரியான நேரத்தில் பந்து அடிப்பதற்கு ஏற்ற வகையில் கிடைத்தது. இந்த போட்டியில் நான் நன்றாக விளையாடினாலும் ஆட்டம் இழந்த விதம் ஏமாற்றத்தை அளித்தது. இன்னும் கொஞ்சநேரம் விளையாட எண்ணி இருந்தேன். முதல் 2 போட்டியில் நான் சரியாக ஆடவில்லை. இதனால் 3-வது போட்டியில் சிறப்பாக ஆட நினைத்தேன். அதன்படி முக்கியமான இந்த ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்டேன்.


சூப்பர் ஓவரில் நான் அடித்த 2 சிக்சரை விட முகமது ஷமியின் கடைசி ஓவரால் தான் வெற்றி கிடைத்தது. அவர் கடைசி ஓவரை மிகவும் சிறப்பாக வீசினார். பனித்துளி அதிகமாக இருந்ததால் பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருந்தது. பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருந்த இந்த ஆடுகளத்தில் முகமது ஷமி நேர்த்தியுடன் பந்து வீசினார்.


தற்போது இந்திய அணி 20 ஓவர் போட்டியில் சிறப்பாக ஆடி வருகிறது. முன்னணி வீரர்கள் அனைவருமே ரன்களை குவிப்பது ஆரோக்கியமானது. ஒவ்வொருவரும் சிறப்பாக ஆடுவதால் 11 பேர் கொண்ட அணியில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை சொல்ல இயலாது. கேப்டனும், அணி நிர்வாகமும் தான் இதுகுறித்து முடிவு செய்வார்கள்.
நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த 2 போட்டியிலும் வெற்றிபெற்று எங்களது ஆதிக்கத்தை நீட்டித்துக் கொள்ள விரும்புகிறோம்.


இவ்வாறு அவர் கூறினார்.

முகநூலில் நாம்