வேக கட்டுப்பாட்டை இழந்ததால் இளம் உயிரை காவு கொண்டது விபத்து

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்ந்து சென்ற இளைஞன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் மதுபோதையில் இருந்தததாகவும் வேகக் கட்டுப்பாட்டையிழந்து விபத்து ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

வேலணை நான்காம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜெகதீபன் தனுசியன் (வயது -18) என்ற இளைஞனே உயிரிழந்தார்.

“கடந்த 25ஆம் திகதி பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு இளைஞன் சென்றுள்ளார். அவர் கடைக்கு மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் இருந்து தலைக்கவசம் அணியாமல் சென்றுள்ளார்.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் மதுபோதையில் இருந்துள்ளார். அவரிடம் சாரதி அனுமதிபத்திரம் இல்லை. அவரும் தலைக்கவசம் அணியாமல் பயணித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டையிழந்து மதிலுடன் மோதியதால் பின்னாலிருந்த இளைஞன் தூக்கி வீசப்பட்டார். அவரது தலை பலமாக மோதிக் கொண்டதனால் மயக்கமடைந்தார்.

இளைஞன் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் 9 நாள்களின் பின் சிகிச்சை பலனின்றி இளைஞன் நேற்று உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஓடியவர் காயங்களுடன் தப்பித்துள்ளார்” என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் நேற்று (03) மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்