
பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக இதுவரை 134 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பொருட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் ராணுவ வீரர்களும், தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த நபர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே வெள்ளத்தில் சிக்கி 134 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் 61 பேர் ஆண்கள் என்றும், 14 பெண்கள் என்றும், 59 பேர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த உயிரிழப்பில் 48 பேர் கைபர்-பக்துன்க்வா பகுதியை சேர்ந்தவர்கள், 34 பேர் சிந்து பகுதியை சேர்ந்தவர்கள், 17 பேர் பலுசிஸ்தான் பகுதியை சேர்ந்தவர்கள், 14 பேர் பஞ்சாப் பகுதியை சேர்ந்தவர்கள், 11 பேர் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியை சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கனமழையில் சிக்கி 81 பேர் படுகாயம் அடைந்தனர். பலர் பாதுகாப்பான இடங்களில் முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அரசு சார்பில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.