வெள்ளை மாளிகைக்கு செல்ல போதிய இடங்கள் உள்ளன – பைடன்

அமெரிக்க அதிபராக தேர்வு பெற ஜனநாயக கட்சிக்கு போதிய இடங்கள் உள்ளதாக அதன் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர் “வெற்றி பெற்று விட்டேன்” என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. அமெரிக்காவில் இன்னும் பல மாகாணங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

மிஷிகனில் பைடனுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக பிபிசி கணித்துள்ளது. அதே சமயம், விஸ்கான்சினில் அவருக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.

பென்சில்வேனியாவில் இதுவரை முடிவுகள் வெளியாகாதபோதும், அங்கு நிலைமை சாதகமாக இருக்கும் என்று பைடன் கூறியுள்ளார்.

இதற்கிடையே, மிஷிகன், பென்சில்வேனியா, ஜோர்ஜா ஆகிய மாகாணங்களில் தேர்தல் முடிவுக்கு எதிரான சட்ட நடவடிக்கையை டிரம்பின் ஆதரவாளர்கள் முன்னெடுத்துள்ளனர்.

தபால் வாக்குகளை எண்ணும் நடவடிக்கையை நிறுத்தப்போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அவை மோசடியாக நடந்தவை என்றும் டிரம்ப் கூறுகிறார். ஆனால், அதற்கான ஆதாரங்களை இன்னும் வெளியிடவில்லை. மேலும், பரவலாக தேர்தல் மோசடி நடந்ததற்கான ஆதாரம் ஏதுமில்லை என்று சர்வதேச பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக அமெரிக்கா முழுவதும் நிலைமை அமைதியாகவே இருக்கிறது. ஆனால், டெட்ராய்ட் பகுதியில் வாக்கு எண்ணிக்கை பகுதியில் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியினர் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டதால் அவர்கள் அந்த மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை என்று களத்தில் இருந்து பிபிசி செய்தியாளர் லெபோ டிசேக்கோ கூறுகிறார்.

(நன்றி BBC தமிழ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்