
வெள்ளையின பிள்ளைகள் பிறப்பை அதிகரிப்பதற்காக பல பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கும், கூட்டுப் படு கொலைகளுக்கும் அமெரிக்க முன்னாள் படை வீரர் ஒருவர் திட்டமிட்டதாக அமெரிக்காவின் சமஷ்டி புலனாய்வுத் திணைக்களமான எவ்.பி.ஐ தெரிவித்துள்ளது.

நவ நாஸி (நியோ நாஸி) குழுவொன்றின் அங்கத்தவரான இந்நபர், சிறுபான்மையினரை குறிப்பாக யூதர்களை கொலை செய்வதற்கும் திட்டமிட்டிருந்தார் என எவ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
மெத்தியூ பெலாஜே எனும் இந்நபர், அமெரிக்க மெரைன் படையில் 2019 முதல் 2021 மே மாதம் வரை பணியாற்றியவர். அதன்பின் அப்படையிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
சட்டபூர்வமாகவும் சட்டவிரோதமாகவும் துப்பாக்கிகளை வைத்திருந்தவர் மெத்தியூ பெலாஜே. துப்பாக்கிகளை வாங்குவதற்கு பொய்யான தகவல்களை வழங்கியமை தொடர்பான குற்றச்சாட்டில் நியூ யோர்க்கில் வைத்து கடந்த ஜூன் 10 ஆம் திகதி மெத்தியூ பெலாஜே கைது செய்யப்பட்டிருந்தார்.
நியூ யோர்க் பொலிஸ் அதிகாரி ஒருவர் மூலம், இரு துப்பாக்கிகளை பெலாஜே வாங்கினார். 2ஆம் உலக யுத்த காலத்தில் அடோல்வ் ஹிட்லரின் நாஸி படைகளால் பயன்படுத்தப்பட்ட, லூகர் கைத்துப்பாக்கியும் இவற்றில் அடங்கும் எனவும் எவ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள தடுப்பு நிலையமொன்றில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஹவாயிலுள்ள படைத்தளம் ஒன்றிலேயே அவர் மெரைன் படைவீரராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் தான் நிரபராதி என கடந்த திங்கட்கிழமை (25) மெத்தியூ பெலாஜே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சட்டவிரோத துப்பாக்கி கொள்ளவனவு தொடர்பான விசாரணைகளின்போது, அவரின் பயங்கரத் திட்டங்கள் அம்பலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரேப்கிறேக் ( Rapekrieg) எனும் நவ நாஸி குழுவொன்றின் அங்கத்தவராக அவர் பெலாஜே உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூ யோர்க் மாநிலத்தில் மக்கள் செறிந்து வாழும் லோங் ஐலண்ட் பிரதேசத்திலுள்ள யூத வழிபாட்டுத்தலம் ஒன்றில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் சகிதம் தாக்குதல் நடத்துவற்கும் அவர் திட்டமிட்டார் என நீதிமன்ற ஆவணமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ரோலிங் ஸ்டோன் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்.பி.ஐ. வழங்குத் தொடுநர்களின் தகவல்களின்படி, மெத்தியூ பெலேஜே சமூகத்துக்கு அபாயகரமானவர் எனவும், விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதற்கு அச்சுறுத்தலானவர் எனவும் ஜூலை 14 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அப்பபத்திரிகை தெரிவித்துள்ளது.
ஏனெனில், தான் வெறுக்கும் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அருகிலிருந்தால், அவர்களுக்கு பெலாஜே தீங்கு ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவர் அடைத்து வைக்கப்பட்டிருக்க வேண்டியவர் மேற்படி ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரேப்கிறேக் நவநாஸி குழுவினர் ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு பயிற்சி பெற்றதுடன், எதிரிகள் மீது, வல்லுறவு, காயம், அடக்குமுறை, அச்சுறுத்தல், மிரட்டல் ஆகியன உள்ளடங்களலான பல தாக்குதல்களை நடத்துவது குறித்தும், வெள்ளையின சனத் தொகையை அதிகரிக்கும் நோக்குடன், வெள்ளையின பிள்ளைகள் பிறப்பதை அதிகரிப்பதற்காக வெள்ளையினப் பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்து குறித்தும் இக்குழுவினர் கலந்துரையாடினர் என ஹவாய்க்கான அமெரிக்க அரச வழக்குத் தொடுநர் கிறேக் நோலன் தெரிவித்துள்ளார்.
வெள்ளையின நாடொன்றை உருவாக்குவதே இக்குழுவினரின் நோக்கம் எனவும் நீதிமன்றதில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில் கிறேக் நோலன் குறிப்பிட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டு மெத்தியூ பெலாஜே தொடர்பாக எவ்.பி.ஐ. அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். வெள்ளை மேலாதிக்கவாத குழுக்கள், நாஸி இலக்கியங்கள், யூத சமூகத்துக்கு எதிரான காட்டுமிராண்டி செயற்பாடுகள், பெண்களுக்கு எதிரான காட்டுமிராண்டி செயற்பாடுகள், பாலியல் வல்லுறவு, கூட்டுக்கொலைகள் ஆகியன தொடர்பான 1950 புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியன மெரைன படைத்தளத்தில் பெலாஜேவின் வசிப்பிடத்தில் எவ்.பி.ஐ. அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டன எனவும் ரோலிங்ஸ்டோன் சஞ்சிகை தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு 9 கறுப்பினத்தவர்களை சுட்டுக்கொன்றதால் சிறையிலடைக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் உள்நாட்டு பயங்கரவாதியாக பிரகடனப்படுத்தப்பட்ட வெள்ளையின மேலாதிக்கவாதி டைலோன் ரூவ் நடத்திய படுகொலை வீடியோவும் இவற்றில் அடங்கும் எனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூத பெயர்களில் போலி சமூகவலைத்தளக் கணக்குகளை ஆரம்பித்து, யூதர்கள் மீதான கறுப்பினத்தவர்களின் விரோதத்தை ஏற்படுத்தக்கூடிய பதிவுகளை வெளியிடுவதற்கும் இக்குழுவினர் திட்டமிடடரன். இதற்காக மெத்தியூ பெலேஜேவும் யூத பெயரில் டுவிட்டர் கணக்க ஒன்றை ஆரம்பித்து இத்தகயை பதிவுகளை வெளியிட்டார் எனவும் வழக்குத் தொடுநர்கள் தெரிவித்துள்ளனர்.