வெளிநாட்டு வாழ் இலங்கையருக்கு நல்ல தருணம்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைப் பணியாளர்களிடமிருந்து கிடைக்கும் பணத் தொகையை அதிகரிக்க வேண்டுமாயின், அவர்களால் அனுப்பப்படும் பணம் உரிய முறையில் பயன்படுத்தப்படுகின்றது என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்த அமைச்சரவை இணைப் பேச்சாளர் மனுஷ நாயணக்கார, இது தொடர்பில் அவர்களுக்கான உத்தரவாதத்தை தான் வழங்குவதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (7) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர்,

தற்போதைய நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எரிபொருள், எரிவாயு, மருந்து, உரம் உள்ளிட்ட பொருள்களை பெற்றுக்கொள்ள ஒத்துழைப்புகளை வழங்குமாறு வெளிநாடுகளில் பணபுரியும் இலங்கைப் பணியாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமும் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்தார்.

அவர்களால் அனுப்பப்படும் பணம் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா, அத்தியாவசிய பொருள்கள் கொள்வனவுக்கு முன்னுரிமை அளிக்கப்படாமல் ஹெலிகொப்டர்களுக்கு எரிபொருள் நிரப்ப பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் அவர்களுக்குள் இருப்பதாகவும் பழைய தவறுகளே அவர்களுக்கு இவ்வாறான சந்தேகங்கள் ஏற்பட காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு வீழ்ந்துள்ள நாட்டை கட்டியெழுப்ப தயாராவதாகவும் தான் தோல்வியடைந்ததை ஒத்துக்கொண்டு தவறை திருத்திக்கொண்டு முன்னோக்கி செல்ல ஜனாதிபதி தயாராக இருப்பதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்