விவசாயிகளின் உரப்பிரச்சினைக்கு எதிர்த்து TNA யின் பாரிய போராடடம்

விவசாயிகளின் உரப்பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு வழங்காதுள்ள நிலையில் அதனை கண்டித்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக எதிர்வரும் 18 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் இருக்கின்ற சகல கமநல உத்தியோகத்தர்கள் அலுவலகம் முன்பாக போராட்டங்களை நடத்தவும், அதேபோல் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்காது, அதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்தாது மீன்பிடித்துறை அமைச்சர் மற்றும் அரசாங்கம் வேடிக்கை பார்ப்பதை கண்டித்து எதிர்வரும் 17ஆம் திகதி முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரையிலும் படகுகளியே  எதிர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாடு முழுவதும் விவசாயிகள், தோட்டத்தொழில் புரிபவர்கள் மிகப்பெரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக இரசாயன உரம் இறக்குமதியை அரசாங்கம் தடை செய்துள்ள நிலையில் இயற்கை உரம் மூலமாக பயிர்செய்கை செய்வதற்கான எந்தவித ஆயத்தமும் இல்லாது திடீரென இரசாயன உரத்தை நிறுத்தியமை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது பெரும்போகம் ஆரம்பமாகின்றது, வடக்கு கிழக்கில் விதைப்பு ஆரம்பிக்கப்பட்டு விட்டது, ஏனைய பகுதிகளில் ஒரு சில வாரங்களில் ஆரம்பிக்கப்படுகின்றது.

விதை விதைத்து குறுகிய காலத்தில் கிருமி நாசினிகள் தெளிக்க வேண்டும். இல்லையேல் அந்த பயிர்கள் நாசமாகிவிடும். ஆகவே அரசாங்கம் இரசாயன உரத்தை வழங்க வேண்டும் என்ற கோசம் எழுந்துள்ளது, இதன் ஒரு விளைவாக விவசாயத்துறை அமைச்சரின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

எமது விவசாயிகளுக்கு உரம் கிடைக்காவிட்டால் சரியான விதத்தில் அறுவடை செய்ய முடியாது போய்விடும், எனவே இந்த காரணிகளை சுட்டிக்காட்டி வருகின்ற பாராளுமன்ற அமர்விலே சபை ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றினை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் எதிர்வரும் 18ஆம் திகதி வடக்கு கிழக்கில் இருக்கின்ற சகல கமநல உத்தியோகத்தர்கள் அலுவலகம் முன்பாக போராட்டங்கள் நடத்தப்படும், தற்போது நாட்டில் இருக்கின்ற கொவிட் வைரஸ் காரணமாக மக்கள் ஒரு இடத்தில் ஒன்று சேர்வது உசிதமானதல்ல.

ஆகவே குறிப்பிட்ட சகல கமநல உத்தியோகத்தர்கள் அலுவலகம் முன்பாக சமூக பொறுப்புடன், சமூக இடைவெளியை பின்பற்றி குறுகிய நபர்கள் இந்த போராட்டத்தை ஒரே நேரத்தில்  நடத்துவதன் மூலமாக இந்த எதிர்ப்பை வெளிப்படுத்த முடியும், சகல மாவட்டங்களிலும் உள்ள மத்திய நிலையங்களுக்கு முன்பாக காலை 9 மணிக்கு இந்த போராட்டம் நடத்தப்படும்.

இது குறித்து தெற்கின் அரசியல் தலைவர்களுடன் பேசியுள்ளேன், ஜே.வி.பி யின் தலைவருடன் பேசியுள்ளேன், எதிர்க்கட்சி தலைவருடனும் பேசியுள்ளேன்.

தமது பிரதேசங்களிலும் விதைப்பு ஆரம்பிக்கும் காலத்தில் இவ்வாறான போராட்டங்களை நடத்துவார்கள். பசளைகள் கிடைக்கும் வரையில் இந்த போராட்டங்கள் தொடரும். இந்த போராட்டத்தின் ஆரம்பம் வடக்கு கிழக்கில் இருந்து ஆரம்பிக்கின்றது.

இதற்கு பொதுமக்களும் தமது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும், இது அரசியல் சாயம் பூசிய போராட்டம் அல்ல, மக்களின் போராட்டம் என்ற காரணத்தினால் இதில் சகல மக்களினதும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்

அதேபோல் வடக்கு மீனவர்கள் மீண்டும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில், கடந்த அரசாங்கம் மீன்பிடி சட்டமொன்றை உருவாக்கியுள்ள நிலையில் அதனை தற்போதிய மீன்படி அமைச்சர் நடைமுறைப்படுத்தாது எமது மீனவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் செயற்பாடுகளை கண்டித்து அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக கடலில் மீனவர்கள் எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளோம்.

எதிர்வரும் 17ஆம் திகதி முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரையிலும் படகுகளியே நாம் எதிர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளோம். இது எமது மீன்பிடி அமைச்சருக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, இந்த சட்டத்தை உபயோகிங்கள் என்ற காரணத்தை வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தவுள்ளோம் எனவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்