விளம்பரப்படுத்தி திருட்டு சைக்கிளை விற்க முற்பட்ட இளைஞன் கைது

பொருட்கள் விற்பனை செய்வதற்கான பிரபல இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தி திருட்டு துவிச்சக்கர வண்டியை விற்பனை செய்ய முற்பட்ட இளைஞர் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் மூளாய் வேரம் அக்கினி வைரவர் ஆலயத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இசை நிகழ்ச்சிக்கு சென்று இருந்த பொன்னாலையை சேர்ந்த இளைஞன் ஒருவரின் துவிச்சக்கர வண்டி களவு போயிருந்தது.

அது தொடர்பில் அன்றைய தினமே வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் , பொருட்களை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிடும் பிரபல இணையத்தளம் ஒன்றில் திருடப்பட்ட துவிச்சக்கர வண்டியை விற்பனை செய்யப்படவுள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது.

அதனை அவதானித்த துவிச்சக்கர வண்டியின் உரிமையாளர் , விளம்பரத்தில் இருந்த தொலைபேசிக்கு அழைப்பினை மேற்கொண்டு , துவிச்சக்கர வண்டியை வாங்கவுள்ளதாக கூறி விலையை பேசி தீர்மானித்து சங்கானை பகுதிக்கு வருமாறு கூறியுள்ளார்.

அதனை நம்பி துவிச்சக்கர வண்டியை விற்பனைக்காக விளம்பரப்படுத்தி இருந்த நபர் உரிமையாளரிடமே துவிச்சக்கர வண்டியை விற்க வந்த நிலையில் உரிமையாளரின் நண்பர்கள் மடக்கி பிடித்தனர்.

விற்பனைக்கு கொண்டு வந்த இளைஞனிடம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , வைரவர் ஆலய இசை நிகழ்ச்சிக்கு தாம் வந்திருந்த போது , தம்மிடம் ஒருவர் இந்த சைக்கிளை 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தததாகவும் , அதனையே தாம் வாங்கி மீள விற்பனை செய்வதற்காக விளம்பரப்படுத்தியதாக கூறியுள்ளார்.

அதேவேளை இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து , பொலிஸார் துவிச்சக்கர வண்டியை விற்பனை செய்ய வந்த இளைஞன் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்