விராட் கோலி போன்று பென் ஸ்டோக்ஸ் அணியை வழி நடத்துவார்: ஜோ ரூட்

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 8-ந்தேதி தொடங்குகிறது. இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு நட்சத்திர வீரர் ஜோ ரூட் கேப்டனாக உள்ளார்.

இவரது மனைவிக்கு ஜூலை மாதத்தில் 2-வது குழந்தை பிறக்க உள்ளது. மேலும் உயிர்-பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதால் ஒன்று அல்லது இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் துணை கேப்டனாக உள்ள பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக பணியாற்ற வாய்ப்புள்ளது. பென் ஸ்டோக்ஸ் கேப்டன் பதவியில் விராட் கோலியை போன்று அணியை வழி நடத்துவார் என்று ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில் ‘‘விராட் கோலி களம் இறங்கி சிறப்பாக விளையாடும்போது அணியின் ஒவ்வொரு வீரரும் அதேபோன்று விளையாட வேண்டும் என்று எதிர்பார்ப்பார் என்று நமக்கும் தெரியும். பென் ஸ்டோக்ஸ் கேப்டன் பொறுப்பில் எப்படி செயல்படுவார் என்று நான் கற்பனை செய்கிறேன்.

பென் ஸ்டோக்ஸிடம் அணியை முன்னின்று வழி நடத்தும் சிறப்பான திறமை உள்ளது. அணியின் துணை கேப்டனாக இருக்கும்போதே சிறந்த தலைவராக இருந்துள்ளார். அவர் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சாதித்துள்ளார். கேப்டன் பொறுப்பை செய்வதற்கு போதுமான நபராக இருக்கிறார்’’ என்றார்.

முகநூலில் நாம்