வியட்நாம்-சிங்கப்பூர் எல்லையில் விபத்துக்குள்ளான படகில் பயணித்த 303 பேரும் இலங்கையர்களென தகவல்

வியட்நாம்-சிங்கப்பூர் எல்லையில் விபத்துக்குள்ளான படகில் பயணித்த 303
பேரும் இலங்கையர்களென தெரிவிக்கப்படுகிறது.

அகதிகள் என சந்தேகிக்கப்படும் 303 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று
வியட்நாம்-சிங்கப்பூர் எல்லையில் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன.

இவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு வியட்நாம் அதிகாரிகளுடன்
பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர்
ஜனாதிபதியின் சட்டத்தரணி அலி சப்ரியும் உறுதிப்படுத்தினார்.

303 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற இலங்கை மீன்பிடிக் கப்பல் நேற்று
(திங்கட்கிழமை) வியட்நாம் மற்றும் சிங்கப்பூருக்கு அருகிலுள்ள கடலில்
விபத்துக்குள்ளானது.

கப்பல் ஆபத்தில் சிக்கியபோது, அங்கிருந்த இலங்கையர் ஒருவர் இலங்கை
கடற்படை மீட்பு நடவடிக்கை மையத்தை தொடர்புகொண்டு, இந்த விடயம் குறித்து
தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவர்கள் இது தொடர்பாக வியட்நாம் கடற்படை
மீட்பு நடவடிக்கை மையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அப்போது வியட்நாமிய பிரதேசத்தில் இருந்து 258 கடல் மைல் தொலைவில் கப்பல்
சென்று கொண்டிருந்ததாக வியட்நாம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்பின்னர், வியட்நாம் சிங்கப்பூர் மற்றும் மலேசியா அரசாங்கங்களைத்
தொடர்புகொண்டு குறித்த கப்பல் குறித்த தகவல்களைப் பரிமாறிக்கொண்டது.

இது தொடர்பில் அருகில் பயணித்துக்கொண்டிருந்த ஜப்பானிய கப்பலுக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டதுடன், அவர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்
பின்னர், கப்பலில் இருந்தவர்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்