விம்பிள்டனிலிருந்து நடால் வாபஸ் ; இறுதிப் போட்டியில் கிர்கியோஸ்

அகில இங்கிலாந்து டென்னிஸ் கழக அரங்குகளில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலிருந்து முன்னாள் சம்பியன் ரபாயல் நடால் வாபஸ் பெற்றுள்ளார். இதன் காரணமாக கணவான்கள் (ஆடவர்) ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் நடாலை எதிர்த்தாடவிருந்த அவுஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸ் போட்டியின்றி (walk-over) இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றார்.

இவர்கள் இருவருக்கும் இடையிலான அரை இறுதிப் போட்டி இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், நடாலின் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவர் அரை இறுதிப் போட்டியில் இருந்து வாபஸ் பெறுவதாக உத்தியோகபூர்வமாக நேற்று இரவு அறிவித்ததாக விம்பிள்டன் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

22 தடவைகள் கிராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வென்றெடுத்த நடால், வியாழக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது போட்டியிலிருந்து வாபஸ் பெறுவதாக அறிவித்தார். >இதன் காரணமாக ஒரே வருடத்தில் நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றெடுக்கும் அவரது எதிர்பார்ப்பு வீண் போயிற்று.

புதன்கிழமை 5 செட்கள்வரை நீடித்த அமெரிக்க வீரர் டெய்லர் ப்ரிட்ஸுடனான கால் இறுதிப் போட்டியில் கடும் சவாலுக்கு மத்தியில் 3 – 2 என்ற செட்கள் அடிப்படையில் நடால் வெற்றிபெற்றிருந்தார். 4 மணித்தியாலங்கள், 20 நிமிடங்கள் நீடித்த அப் போட்டியில் கடும் உபாதையுடன் நடால் விளையாடினார். அப் போட்டியிலிருந்து வாபஸ் பெறுமாறு அவரது தந்தை கோரிய போதிலும் நடால் தொடர்ந்து விளையாடி அபார வெற்றியீட்டினார்.

எவ்வாறாயினும் வியாழக்கிழமை நடத்தப்பட்ட ஸ்கான் பரிசோதனை மூலம் அவரது வயிற்றுப் பகுதி தசையில் 7 மில்லிமீற்றர் விரிசல் காயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 13 வருடங்களுக்கு முன்னர் நடபெற்ற யுவான் மார்ட்டின் டெல் போட்டோவுடனான   அமெரிக்க பகிரங்க டென்னிஸ் இறுதிப் போட்டியில் தசையில் 20 மில்லிமீற்றர் விரிசல் காயத்துடன் விளையாடிய நடால் அப் போட்டியில் தோல்வி அடைந்திருந்தார்.

ஸ்கான் பரிசோதனையின் பின்னரும் அரை இறுதியில் விளையாடும் திட்டத்துடன் நடால் பயிற்சியில் ஈடுபட் டு   வந்தார். ஆனால், பந்து பரிமாற்றங்களின்போது (சேர்விஸ்) அவர் கஷ்டப்படுவதை அவதானிக்க முடிந்ததாக மார்க்கா பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

நான் அவதிப்படுவதை நேற்று (புதன்கிழமை) எல்லோரும் பார்வையிட்டனர். எனது வயிற்றுப் பகுதியில் கடும் வலியால் நான் அவதிப்பட்டேன். எனவே அரை இறுதிப் போட்டியிலிருந்து விலகிக் கொள்ள தீர்மானித்தேன்’ என்றார். நான் தொடர்ந்து விளையாடினால் எனது காயம் மேலும் மேலும் மோசமடையும். இத்தகைய சூழ்நிலையில் என்னால் இரண்டு ஆட்டங்களில் வெல்ல முடியும் என நான் நம்பவில்லை. அதனால்தான் இந்த முடிவுக்கு வந்தேன்’  என ஊடக சந்திப்பில்  நடால்   குறிப்பிட்டார்.

நடால் வாபஸ் பெற்றதை அடுத்து வோக்-ஓவர் முறையில் இறுதிப் பொட்டியில் விளையாட தகதிபெற்ற நிக் கிர்கியோஸ், இன்று மாலை நடைபெறவுள்ள நொவாக் ஜோகோவிச், பிரித்தானிய வீரர் கெமரன் நோரி ஆகியோருக்கு இடையிலான அரை இறுதிப் போட்டியில் வெற்றிபெறுபவரை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் எதிர்த்தாடுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்