விமான நிலையத்தைத் திறக்கும் திட்டம் பிற்போடப்பட்டது!

கொரோனாவினால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை சீர்செய்யும் நோக்கில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஆகஸ்ட் முதலாம் திகதி திறப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கான எண்ணம் இருந்த போதும், சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பும் உலக சுகாதார ஸ்தாபனமும் அதற்கான அறிவுறுத்தல்களை வழங்கவில்லை என விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி குறிப்பிட்டார்.

சுற்றுலாப் பயணிகளை உள்வாங்குவது, தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பிலான விதிமுறைகளை உலக சுகாதார ஸ்தாபனம் தௌிவுபடுத்த வேண்டும் எனவும் அதனை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

ஜூலை மாதத்தில் அவர்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்குவார்களாயின், ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி விமான நிலையத்தை திறக்க முடியும் என ரஜீவ் சூரியஆரச்சி தெரிவித்தார்.

இதேவேளை, தொற்றுநோய் பரவும் அபாயம் குறித்த விழிப்புணர்வுடன் சுற்றுலாத்துறையை ஆரம்பிக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்க செயலாளர் செனால் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், கொரோனா தொற்று நாட்டில் சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அவர் அவ்வாறு கூறினாலும் ஐரோப்பிய சங்கம் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை உள்வாங்கப்படவில்லை. அவர்கள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட 15 நாடுகளை அறிவித்துள்ளனர்.

சேர்பியா, தாய்லாந்து, டியூனீசியா, அல்ஜீரியா, உருகுவே, ருவாண்டா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட 15 நாடுகள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்த நாடுகளில் இருந்து வருகை தருவோருக்கு எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து ஐரோப்பாவிற்குள் நுழைவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்