
விண்வெளிக்கு அப்பால் இருந்து மர்மமான ரேடியோ சமிக்ஞைகள் வருவதை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். வானியலாளர்களால் மர்மமான ரேடியோ சமிக்ஞை கண்டறியப்படுவது இது இரண்டாவது முறையாகும். இது அறிவியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானியலாளர்கள் எங்கிருந்து இந்த சமிக்ஞை தோன்றியது ? இதனை அனுப்பியது யார்? என்ற கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்கும் பணியில் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இந்த சமிக்ஞைகள் 3 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கும் கேலக்சியில் இருந்து வந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கணித்திருக்கிறார்கள். இவை சில மில்லி வினாடிகளே நீடித்தாலும் பலமான ரேடியோ சமிக்ஞைகளை இவை கொண்டிருப்பதாக வானியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
கடந்த 2017 ஆம் ஆண்டு, மாணவர் டேவிட் நர்கெவிக் மற்றும் அவரது மேற்பார்வையாளர் டங்கன் லோரிமர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் மூலம் இந்த சமிக்ஞையை முதன்முறையாக கண்டுபிடித்தனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ரேடியோ அலைக்கு வானியலாளர்கள் FRBs 20190520B எனப் பெயரிட்டுள்ளனர்.

மே 20, 2019 அன்று சீனாவின் குய்சோவில் உள்ள ரேடியோ தொலைநோக்கியைப் (FAST) பயன்படுத்தி இந்த சமிக்ஞை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ஏப்ரல் 2020 மற்றும் செப்டம்பர் 2020 க்கு இடைப்பட்ட காலத்தில் இதுபோல 75 FRBs பதிவாகியுள்ளன. இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ரேடியோ சமிக்ஞைகள், நிலையான வானொலி மூலத்திலிருந்து வருகிறது என்றும் அங்குள்ள dwarf கேலக்சி ஒன்றுக்கு அருகே அமைந்துள்ள விண்மீனுடன் இந்த சமிக்ஞைகளளுக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரேடியோ சமிக்ஞைகள் உருவாகும் இடத்திற்கு அருகே, மற்றொரு இடத்திலிருந்தும் பலமில்லாத ரேடியோ சமிக்ஞைகள் உருவாவதாக கணித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இதுகுறித்து முழுமையான தகவல்களை பெற நீடித்த ஆய்வுகள் தேவை என்கின்றனர். மேலும், தற்போது கன்டுபிடிக்கப்பட்டுள்ள FRBS 20190520B “புதிதாகப் பிறந்ததாக இருக்கலாம்” என்றும் வானியலாளர்கள் கருதுகின்றனர்.
அதாவது, நியூட்ரான் நட்சத்திரத்தை வெளியிட்ட சூப்பர்நோவா வெடிப்பால் வெளியேற்றப்பட்ட அடர்த்தியான பொருட்களால் இந்த ரேடியோ சமிக்ஞைகள் இன்னும் சூழப்பட்டிருக்கலாம் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.