விஜய் சேதுபதி மகளுக்குப் பாலியல் மிரட்டல் விடுத்த இலங்கை நபர் மன்னிப்பு கோரினார்

தம்பியாக நினைத்து மன்னித்து விடுங்கள்: விஜய் சேதுபதி மகளுக்குப் பாலியல் மிரட்டல் விடுத்த இலங்கை நபர் வேண்டு என் பெயரும் முகமும் வெளியே தெரிந்தால் என் வாழ்க்கையே வீணாகிப் போய்விடும்

விஜய் சேதுபதியின் மகளுக்குப் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த இலங்கை நபர் மன்னிப்பு கோரியுள்ளார்.இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளா் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட உள்ள ‘800’ திரைப்படத்தில் நடிப்பதற்கு, நடிகா் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டாா்.

முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்கக் கூடாது என விஜய் சேதுபதிக்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் எதிா்ப்புத் தெரிவித்தனா். பெரும்பாலான அரசியல் கட்சிகள், விஜய் சேதுபதி அந்த திரைப்படத்தில் நடிக்கக் கூடாது என வலியுறுத்தி வந்தன. சமூக ஊடகங்களில் சிலா் விமா்சித்தும், கடுமையான கருத்துக்களையும் தெரிவித்து வந்தனா்.விஜய் சேதுபதியின் ட்விட்டர் கணக்கில் ரித்திக் என்ற நபா், விஜய் சேதுபதியின் மகளுக்குப் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்து கருத்து பதிவிட்டாா். இது பலரையும் அதிா்ச்சி அடைய வைத்தது.

இதற்கிடையே அந்த திரைப்படத்தில் இருந்து விலகியதாக விஜய் சேதுபதி அறிவித்தாா்.ட்விட்டரில் மிரட்டல் விடுத்த நபா் மீது நடவடிக்கை எடுக்கும்படி விஜய் சேதுபதி தரப்பு, சென்னை பெருநகர காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவில் புகாா் செய்தது. அந்தப் புகாரின் அடிப்படையில், கலகத்தை ஏற்படுத்த தூண்டுதல், பொது வெளியில் ஆபாசமாக கருத்து பதிவிடுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய 3 சட்டப் பிரிவுகளில் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக, ரித்திக் என்ற பெயரில் சுட்டுரையில் மிரட்டல் விடுத்த நபரை ஐ.பி.முகவரியை அடிப்படையாகக் கொண்டு சைபா் குற்றப்பிரிவினா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா். இச்சம்பவம் தமிழ் திரைப்படத்துறையினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு தேமுதிக தலைவா் விஜயகாந்த், நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவா் கனிமொழி ஆகியோா் கண்டனம் தெரிவித்தார்கள்.

மிரட்டல் விடுத்த நபரின் ஐ.பி.முகவரியை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் இலங்கையைச் சோ்ந்த நபரே மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சா்வதேச காவல்துறை மூலம் அந்த நபரைக் கைது செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில் சா்வதேச காவல்துறைக்கு ஒரு நபரை கைது செய்வதற்கு பரிந்துரை செய்யும் அதிகாரம் தமிழக காவல்துறையில், சிபிசிஐடி உள்ளிட்ட சில பிரிவுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

எனவே, சைபா் குற்றப்பிரிவினா், இலங்கை நபரைக் கைது செய்வதற்கு சா்வதேச காவல்துறைக்கு பரிந்துரை செய்யக் கோரி, சிபிசிஐடிக்கு ஒரு கடிதம் அளித்துள்ளதாக சென்னை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதன் அடிப்படையில் சிபிசிஐடி அதிகாரிகள், சா்வதேச காவல்துறை மூலம் இலங்கைக் காவல்துறையை தொடா்பு கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள். 

இந்நிலையில் விஜய் சேதுபதியின் மகளுக்குப் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த இலங்கை நபர் மன்னிப்பு கோரியுள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:விஜய் சேதுபதி மற்றும் அவருடைய மகளைப் பற்றி தவறாக எழுதிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கை பிரஜை நான் தான். அனைவரும் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.

கரோனாவால் எனக்கு வேலை போய்விட்டது. இந்த சர்ச்சைக்குரிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் எனத் தெரிந்து கோபத்தில் அந்த ட்வீட்டை வெளியிட்டேன். இனிமேல் அதுபோன்ற ட்வீட்களை என் வாழ்க்கையில் வெளியிட மாட்டேன். இதற்காக உலகத் தமிழர்களிடமும் விஜய் சேதுபதி மற்றும் அவருடைய மகள், மனைவியிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் தம்பியாக நினைத்து என்னை மன்னித்து விடுங்கள். 

என்னை நம்பி ஒரு குடும்பம் உள்ளது. தாய், அப்பா, தம்பி, சொந்தக்காரர்கள் எல்லோரும் இருக்கிறார்கள். என் பெயரும் முகமும் வெளியே தெரிந்தால் என் வாழ்க்கையே வீணாகிப் போய்விடும். என்னைப் பற்றி சிலர் அவதூறு பரப்புகிறார்கள். நான் கெட்ட எண்ணம் கொண்ட மனிதன் இல்லை. மனநிலை பாதிக்கப்பட்டு வேலை கிடைக்காத விரக்தியில் அதுபோலச் செய்துவிட்டேன். என்றார். ரித்திக்கின் தயாரும் விஜய் சேதுபதியிடம் மன்னிப்பு கேட்டு விடியோவில் பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்