விஜய்க்கு சம்பந்தமில்லாமல் சந்திரசேகரின் தீபாவளி ரிலீஸ்

நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், ”அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்” என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் கட்சியாக பதிவு செய்துள்ளார்.ஆனால் இதற்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளார்.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.

நற்பணி மன்றங்களாக இருந்த விஜய் ரசிகர் மன்றங்கள், விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகத்தை நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கவனித்து வந்தார். விஜய்யை முதல்வர் நாற்காலியில் அமர வைத்து பார்க்க வேண்டும் என்பது அவரது கனவு. இதுப்பற்றி பல பேட்டிகளில் அவர் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் கட்சியாக பதிவு செய்ய விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விண்ணப்பித்துள்ளார். இதுப்பற்றிய விபரம் வெளியானதில் இருந்து விஜய் அரசியலுக்கு தயாராகிவிட்டார் என பரபரப்பு ஏற்பட்டது.

இதுப்பற்றி சந்திரசேகர் கூறுகையில், 1993ல் விஜயக்காக ரசிகர் மன்றம் தொடங்கினேன். அதுப்படிப்படியாக சமூக இயக்கமாக மாறி மக்கள் இயக்கமாக வளர்ந்துள்ளது. 20 ஆண்டுகளாக இதை வளர்த்து வருகிறேன். இப்போது, ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் நான் தான் விண்ணப்பித்துள்ளேன். இதற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முழுக்க முழுக்க எனது முயற்சி மட்டுமே. இந்த கட்சியில் விஜய் இணைவாரா என்பது எனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார்.

எனக்கு சம்பந்தமில்லை – விஜய்

தந்தையின் கட்சி பதிவு குறித்து விஜய் தரப்பில் வெளியிட்ட அறிக்கை : ”என் தந்தை அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். அவர் தொடங்கி உள்ள கட்சிக்கும், எனக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த தொடர்பும் இல்லை. அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது. என் தந்தை கட்சி தொடங்கி உள்ளார் என்பதற்காக என் ரசிகர்கள் அந்த கட்சியில் இணையவோ, கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். அந்தக்கட்சிக்கும் நமது இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும் என் பெயரையோ, போட்டோவையோ, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்க்கும் அரசியல் கனவு உள்ளது. ஆனால் இப்போது அதற்கான நேரம் வரவில்லை என ஒதுங்கி செல்கிறார். ஆனால் அவரது தந்தையோ வருகிற தேர்தலிலேயே களமிறங்கி ஓர் முன்னோட்டம் பார்த்து விடலாம் என தயாராகிவிட்டார். அதனால் தான் விஜய்யை நேரடியாக குறிப்பிடாமல் தானே கட்சி தொடங்கி உள்ளது போன்று ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகிறார். இதனால் விஜய்யின் சினிமா பயணம் எந்த வகையிலும் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பது அவரது எண்ணம். அதற்காகவே இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்