வாசிப்பு அனுபவமும் வாசகர் வட்டங்களும்

  – முருகபூபதி

ஒருகோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது,

ஒரு நூலகம் கட்டுவேன்  என்று பதிலளித்தார்  மகாத்மா காந்தி.

தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்..?  என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்றார்  ஜவஹர்லால் நேரு.

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்.

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது,  சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார்  ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா.

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் எனக் கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என தயக்கமின்றி லெனின் கூறியதும்,  குவிந்த புத்தகங்கள் பல இலட்சம்.

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டொலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்.

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றார் மார்டின் லூதர்கிங்.

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்.

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்  என்றார்  ஆபிரகாம் லிங்கன்.

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி – என்றார்
ஜூலியஸ் சீசர்.

இந்த வரிகளை எம்மிடம் விட்டுச்சென்றவர்கள்தான்

உலகத்தலைவர்களும் அறிஞர்களும்!  

சரி, அவர்கள் இன்றில்லை. மறைந்துவிட்டார்கள்! போகட்டும். புத்தகங்கள் பற்றி எங்கள் இலங்கைத் தலைவர்கள் – அறிஞர்கள் ஏதும் சொல்லியிருந்தால், அவை பற்றியும் எழுத்தாளர்களும் வாசகர்களும் அறிந்துகொள்ளத்துடிப்பார்கள் என்றே நம்புகின்றோம்.

சமகாலத்தில் அடிக்கடி புதிய புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழாக்கள் நடப்பதை பார்த்திருப்பீர்கள்.

பின்னர், அந்த நிகழ்ச்சிகளின் படங்களை பத்திரிகைகளிலும் பார்ப்பீர்கள். புத்தகம் எழுதி வெளியிட்ட எழுத்தாளரும், முதல் பிரதி – சிறப்பு பிரதி பெற்ற பிரமுகர்களும், நிகழ்ச்சியில் உரையாற்றிய பேச்சாளர்களும் தத்தம் முகநூல்களில், வாட்ஸ் அப்பில் அந்தப்படங்களை பதிவுசெய்து உலகெங்கும் அனுப்புவார்கள்.

பிறகு, எத்தனை லைக் வந்தது என்று  பார்ப்பார்கள்.

அத்துடன் விடயம் முடிந்தது என்று சிவனே என்று ஓய்வெடுப்பார்கள். பெரும்பாலான புத்தக வெளியீடுகளில் பேசவருபவர்கள், குறிப்பிட்ட புத்தகத்தை முழுமையாக வாசிக்காமலேயே வந்து, நுனிப்புல் மேய்ந்துவிட்டு செல்லும் காட்சிகளையும் ரசித்திருப்பீர்கள்.

வரலாறு, இலக்கியம் என்பன அஞ்சல் ஓட்டத்திற்கு ஒப்பானது. ஒருவரால் முன்னெடுக்கப்படுவது மற்றும் ஒருவரால் தொடரப்படுவது!.

ஒரு காலகட்டத்தில், பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்தும் பலாலி ஆசிரியப்பயிற்சிக் கலாசாலையிலிருந்தும் பலர்  பட்டதாரிகளாகவும் ஆசிரியர்களாகவும் வெளியே வந்தார்கள். அவர்களில் பல  எழுத்தாளர்களும் விமர்சகர்களும் , கலைஞர்களும்  இடம்பெற்றனர்.

ஆனால், சமகாலம் எப்படி இருக்கிறது…?

தொடர்பூடகம் வீச்சாகியிருக்கும் இக்காலத்தில் நிலைமை என்ன…? பெரும்பாலான எழுத்தாளர்கள் தமக்குத்தாமே புகழ் தேடுவதற்காக பிரபலங்களின் முன்னுரை, அணிந்துரைக்கு அலையும் காட்சிகளும் பெருகியிருக்கின்றன. எத்தனை புத்தம் எழுதினோம் என்பது முக்கியமல்ல, எத்தனை வாசகர்களை உருவாக்கினோம் என்று எழுத்தாளர்கள் சிந்திக்கிறார்களா..?

ஊருக்கு ஊர் வாசகர் வட்டங்களை அமைத்து, மாதம் ஒரு தடவை ஒரு நூலைப்பற்றி, அல்லது அண்மையில் படித்த பிடித்தமான நூலைப்பற்றி ஒவ்வொருவரும் பேசலாம்.

புத்தக வௌியீட்டு நிகழ்ச்சிகளில் இளம் தலைமுறையினரான பல்கலைக்கழக – பாடசாலை மாணவர்களுக்கும் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கலாம்.

அவர்களிடம் புத்தகத்தை வழங்கி, முழுமையாக படித்துவிட்டு வந்து வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொள்ளுமாறு தூண்டலாம். இலக்கிய அன்பர்கள் தத்தமது வீடுகளில் கூட வாசகர்களை அழைத்து பேசவைக்கலாம்.

நான் வதியும் அவுஸ்திரேலியா, விக்ரோரியா மாநிலத்தில் மெல்பன் நகரில்,  கடந்த சில வருடங்களாக வாசகர் வட்டம் என்ற அமைப்பு,  வாசகர் சந்திப்புகளை நடத்திவருகிறது.  இம்மாதம் 31 ஆம் திகதி, அதன் ஐந்தாண்டு பூர்த்தி ஒன்றுகூடலுடன், மீண்டும்  ஒரு  வாசகர் சந்திப்பும் நடந்தது.

இதில் கலந்துகொள்பவர்களுக்கு ஒரு புத்தகத்தின் பிரதிகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் அதனை எடுத்துச்சென்று வாசித்து விட்டு, அடுத்த மாத சந்திப்பில், குறிப்பிட்ட புத்தகம் பற்றி தமது வாசிப்பு அனுபவத்தை சமர்ப்பிக்கவேண்டும். நிகழ்ச்சி இறுதியில், மற்றும் ஒரு புத்தகத்தின் பிரதிகள் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நடைமுறை சீராகவும் புரிந்துணர்வோடும் வெற்றிகரமாக நிகழ்ந்துவருகிறது.

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கமும் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. இச்சங்கத்தின் காப்பாளரும் எழுத்தாளரும் நாடக கலைஞருமான கலைவளன் சிசு. நாகேந்திரன் என்பவர் தனது 98 வயதில்  காலமாகிவிட்டார். அன்னாருக்கான நினைவு அஞ்சலிக்கூட்டத்தையும், வெறுமனே அவரது நினைவுப்பகிர்வாக நடத்தாமல், அவர் முன்னர் எழுதிய மூன்று புத்தகங்கள் பற்றிய வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியாகவும் நடத்தினார்கள்.    

இச்சங்கம் கடந்த ஆண்டு இலங்கை தமிழ் எழுத்தாளர்களின் சிறந்த நூல்களைத் தெரிவு செய்து இலங்கை நாணயத்தில் ஐம்பதினாயிரம் ரூபா பரிசு வழங்கியது.

சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய நான்கு துறைகளில் அவ்வாறு தலா ஐம்பதினாயிரம் ரூபா பரிசுபெற்ற நூல்கள் பற்றிய வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியை அண்மையில் மெய்நிகரில் நடத்தினார்கள்.

இவ்வாறு தேர்ந்த வாசகர்கள் உருவாக்கப்படவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்