
வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகள் சுமார்
108 ஏக்கர் நிலப்பரப்பு இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படும் என
இராணுவத்தினர் ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்தனர்.
மீள்குடியேற்றம் தொடர்பான கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை
இடம்பெற்றது.
இதில் முப்படைத் தளபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் ,
சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
க.வி.விக்னேஸ்வரன் , கு.திலீபன், காதர் மஸ்தான், பாதுகாப்பு செயலாளர்
கமல் குணரட்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் காணி விடுவிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு தரப்பினர்,
பலாலி கிழக்கு பகுதியில் சுமார் 108 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என
ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்தனர்.
இதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கீரிமலையில் அமைத்த
மாளிகைக்கும், கீரிமலைக்கும் இடையில் உள்ள கடற்படை முகாம் அமைந்துள்ள
பிரதேசம். காங்கேசன்துறை சந்திக்கும், கடற்படை முகாமுக்கும் இடையில்
அமைந்துள்ள பிரதேசம்.
கிராமக்கோட்டு சந்திக்கும் அண்மையாகவுள்ள இராணுவ முகாம் அமைந்துள்ள
பிரதேசம். பலாலி வடக்கில் அன்ரனிபுரத்துக்கு அண்மையாகவுள்ள இராணுவ முகாம்
என்பன விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதில் பலாலி கிழக்கு பகுதியில் 1500 ஏக்கர் காணி விடுவிக்க வேண்டும் என
எம்.ஏ.சுமந்திரன் கோரினார். எனினும் விமான நிலையம் சர்வதேச தரத்திற்கு
மாற்றப்பட்டதால் காணி விடுவிப்பது கடினம் அப்பகுதியில் 10 மீற்றருக்கு
உயர்வான கட்டடங்கள் கட்டமுடியாது என படைத்தரப்பினர் தெரிவித்தனர்.
அதற்கு சுமந்திரன் அங்கு விவசாய நிலங்களே உள்ளன முதலில் அதனை
விடுவியுங்கள் என தெரிவித்தார். இதற்கு ஜனாதிபதி அந்த பகுதியில்
விடுவிக்கப்படகூடிய நிலங்கள் தொடர்பான அறிக்கையை இருவாரங்களுக்குள்
ஆராய்ந்து தமக்கு அறிக்கையிடுமாறு தனது செயலகப் பிரதானி சாகல
ரத்னாயக்கவுக்கு உத்தரவிட்டார்.