வரலாறு காணாத இராட்சத மழை – 937 பேர் பலி ; தேசிய அவசர நிலை அறிவிப்பு!

பாகிஸ்தானில் கொட்டித்தீர்த்து வரும் வரலாறு காணாத கனமழையால் இதுவரை 937 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டு அரசு தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. வழக்கத்துக்கு மாறாக கொட்டித்தீர்க்கும் இந்த மழையால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

இதனால் 3 கோடிக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து பரிதவித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகின்றன. அதிலும் பாகிஸ்தானில் 23 மாவட்டங்கள் இந்த பேரிடரால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வீடுகள், கார்கள் நீரில் அடித்து செல்லப்படும் காட்சி மற்றும் கார்கள் வெள்ள நீரில் மிதக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இதனிடையே, அங்கு கடந்த ஜூன் 14ஆம் திகதி பருவ மழை தொடங்கியது முதல் நேற்று வரை கொட்டித்தீர்த்த மழையால் இதுவரை 343 குழந்தைகள் உள்பட 937 பேர் பலியாகியிருப்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக சிந்து  மாகாணத்தில் மட்டும் அதிகபட்சமாக 306 பேர் உயிரிழந்துள்ளனர். பலுசிஸ்தானில் 234 பேரும், கைபர் பக்துன்க்வா மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் முறையே 185 மற்றும் 165 பேரும் இந்த மழை வெள்ளத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். அதேபோல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 37 இறப்புகள் பதிவாகியுள்ளது.

இதுமட்டுமின்றி சுமார் 8 இலட்சம் கால்நடைகள் உயிரிழந்திருப்பதாகவும், மொத்தம் 3 ஆயிரம் கிலோ மீட்டர் அளவுக்கு சாலைகள்,பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதிலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 150 கி.மீட்டர் சாலைகளும், 85 ஆயிரம் குடியிருப்புகளும் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பாகிஸ்தானில் 166.8 மி.மீ மழை பதிவாகியிருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 241% அதிகம் என தெரிவிக்கின்றனர். தொடர்ந்து மழை பொழிவதால் மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதும் சிரமமாகியுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்