
தங்களுக்க வழங்கப்படவிருந்த காணி வன வளத் திணைக்களத்தால் தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜெயபுரம் மக்கள் குற்றச்சாட்டு தகவல் உரிமைச் சட்டம் மூலம் வெளிவந்த தகவல்
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுகுட்பட்ட ஜெயபுரம் கிராமத்தைச் சேர்ந்த 27 பேருக்கு தலா ஒரு ஏக்கர் வீதம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட காணியினை வன வளத் திணைக்களம் தனியார் ஒருவருக்கு வழங்கியுள்ளதாக ஜெயபுரம் கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது
ஜெயபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆரம்ப குடிகள் 138 பேருக்கு தேவன்குளத்தின கீழ் தலா ஏக்கர் வீதம் ஒருபோகம் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்கின்ற காணிகள்
வழங்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. இதன் போது குறித்த 138 ஏக்கர் காணிக்குள் 30 ஏக்கர் தனியார் ஒருவரின் காணியும் உள்ளடங்கியதனால் அதற்கு மாற்று ஏற்படாக ஜெயபுரம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் பழைய வன்னேரிக்குளம் வீதியில் 30 ஏக்கர் காணி பூநகரி பிரதேச செயலகம் மற்றும் வனவனதிணைக்கள கொழு்பு அலுவலகத்திலிருந்து வருகை தந்திருந்த உயரதிகாரிகளால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால் இதன் பின்னர் குறித்த காணியினை மாவட்ட வனவளத் திணைக்களம் தனியார் ஒருவருக்கு வழங்கியுள்ளது. அவரிடம் குறித்த 30 ஏக்கர் காணிக்கான ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்தே தமக்கு வழங்கப்படவிருந்த காணியினை தனியாருக்கு
வழங்கியதாக வனவளத் திணைக்களம் தெரிவித்துள்ளது என ஜெயபுரம் மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இது தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பூநகரி பிரதேச செயலகத்திடம் வினவிய போது குறித்த 30 ஏக்கர் காணியினை மாவட்ட வனவளத் திணைக்களம் தகியார் ஒருவருக்கு வழங்கியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு,
அவர் 30 ஏக்கர் காணியினையும் துப்பரவு செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது. அத்தோடு குறித்த காணியினை மாவட்ட வனவளத்திணைக்களம் எந்த ஆவணத்தின் அடிப்படையில் தனியார் ஒருவருக்கு வழங்கியிருக்கின்றார்கள் என்பதனையும்
அவ் ஆவணத்தின் பிரதி ஒன்றையும் தமக்கு அனுப்பி வைக்குமாறும் பூநகரி பிரதேச செயலகம் மாவட்ட வனவளத் திணைக்களத்திடம் கோரியுள்ளது.