வன்னிக்குடிசை: போராளி ஒருவருடைய சாட்சியமாக

–         கருணாகரன்

மகத்தான கனவுகளையும் மாபெரும் நம்பிக்கையையும் பல்லாயிரம் பேருக்குத் தந்த ஈழப்போராட்டமும் அதற்கான போரும் தோல்வியில் முடிந்து விட்டன. ஆனால்  அவற்றின் அதிர்வுகள் முடியவில்லை. அதனுடைய தாக்கம் அப்படியானது. வாழ்க்கையில், அரசியலில், இலக்கியத்தில், சினிமாவில் பிற கலை வெளிப்பாடுகளில்  என பல வகையில் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இன்னும் பல ஆண்டுகளுக்கு இது நிகழும். அதற்கு மேலும் தொடரக்கூடும். காரணம், போராட்டத்தின் தோல்வி உண்டாக்கிய பாதிப்பும் போரின் தாக்கமுமாகும்.

இதன் விளைவு, நேரடியாக பல லட்சம் மக்களின் வாழ்க்கையைப் பாதித்திருக்கிறது. அவர்களுடைய உளநிலையைப்  பாதிக்கிறதுஅவர்களுடைய நினைவுகளில் துக்கமாகவும் வேதனையாகவும் நின்றாடுகிறது. இதன் பிரதிபலிப்புகள் ஏதோ வகையில் வெளியாகிக் கொண்டேயிருக்கும். இன்னொன்று, போர் முடிந்தாலும் இன ஒடுக்குமுறை இன்னும் நீங்கவில்லை. மேலும் புதிய வடிவங்களில் அது அரச பயங்கரவாதமாகித் தீவிரமாகத் தொடர்கிறது. அது நீங்கும் வரை இந்தக் கொதிப்பும் இருந்து கொண்டேயிருக்கும். இந்தக் கொதிப்பின் வெளிப்பாடுகளும் வந்து கொண்டேயிருக்கும். இப்படிப் பல.

ஆயுதப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே இன ஒடுக்குமுறையை மையப்படுத்திய – எதிர்த்த – எழுத்துகள் வந்தன. மு. தளையசிங்கத்தின் “இரத்தம்”, “ஒரு தனிவீடு”, வரதரின் “கற்பு”, வ.அ.இராசரத்தினத்தின் “1+1=1”, அ.செ.முருகானந்தனின் “காளிமுத்துவின் பிரஜாவுரிமை”, சாந்தனின் “கிருஸ்ணன் தூது”, “அந்நியமான உண்மைகள்”, அருளரின் “லங்கா ராணி” செ.யோகநாதனின் “சரணபாலவின் பூனைக்குட்டி” எனத் தொடங்கியது ஒரு நீள் பட்டியல். அநேகமாக அந்த நாட்களில் இன ஒடுக்குமுறையை எதிர்த்தும் விமர்சித்தும் பலரும் எழுதினர்.

ஆயுதப்போராட்ட எழுச்சியோடு   “மரணத்துள் வாழ்வோம்” “சொல்லாத சேதிகள்” எனக் கவிதைகள் பெருகின. எழுத்தும் காட்சிப் படிமங்களுமாக   இது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. பிறகு போரிலக்கியம், போர் எதிர்ப்பிலக்கியம் என்று இது மாற்றமடைந்தது. போரிலக்கியம், போரின், போராட்டத்தின் நியாயங்களை வலியுறுத்தி, விமர்சனங்களைப் புறந்தள்ள முற்பட்டது. போர் எதிர்ப்பிலக்கியம் போராட்டத்தையும் போரையும் கடுந்தொனியில் விமர்சித்தது – விமர்சிக்கிறது. “போராட்டத்தில் உண்டான தவறுகளே சறுக்கல்களுக்கும் தோல்விக்கும் காரணமாகின. அந்தச் சறுக்கல்களே போரின் வாசலில் சனங்களைக் கொண்டு போய் நிறுத்தின. இறுதியில் எல்லாமே அழிந்து நிர்க்கதிக்குள்ளாகி விட்டது“ என்று வாதிடுகின்றன; குற்றம் சாட்டுகின்றன.

போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தவறுகளாலேயே போர் எதிர்ப்பிலக்கியத்தின் திறப்பு நிகழ்ந்தது. “லங்கா ராணி”க்கும்  “புதியதோர் உலக”த்துக்கும் இடையில்தான் எத்தனை பெரிய வேறுபாடு! லங்கா ராணி இன ஒடுக்குமுறையையும் அதை எதிர்கொள்ளும் போராட்ட முறைமையையும் பேசியது. புதியதோர் உலகம் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கமொன்றினுள் நிகழ்ந்த ஜனநாயக மறுப்புகளையும் ஒடுக்குமுறையையும் பேச வேண்டியதாக இருந்தது. லங்கா ராணி வெளிநோக்கிப் பேசியது. புதியதோர் உலகம் உள்நோக்கிப் பேசியது. இங்கே நாம் கவனிக்க வேண்டியது, இந்த இரண்டு பிரதிகளும் மெய் நிகழ்வுகளின் அடியாக எழுதப்பட்டவையாகும். இரண்டும் எழுதப்பட்ட கால இடைவெளி ஒன்றும் நீண்டதல்ல. ஒரு பத்து ஆண்டுகளுக்குள்ளேயே. இதற்குள் எவ்வளவு திசைதிருப்புதல்கள், சிதைவுகள்? குடும்பங்களையும் சொந்த வாழ்க்கையையும் விட்டு, விடுதலைக்கெனப் புறப்பட்டுச் சென்று, விசுவாசமாகவே செயற்பட்ட போராளிகள் எதிர்பார்த்திருக்காத வகையில் இயக்கப் போட்டிகளுக்குள்ளும் தலைமைத்துவப் போட்டிக்குள்ளும் சிக்க வைக்கப்பட்டனர். அவர்களுடைய மகத்தான கனவு சிதைக்கப்பட்டது. நம்பிக்கையின் வேர்களில் தீப்பற்றியது. இது தலைகீழான மாற்றங்களை உண்டாக்கியது.  இந்த வேறுபாடும் மாற்றங்களும் நல்லனவாக அமையவில்லை. தவறுகளாலும் சறுக்கல்களாலும் ஏற்பட்ட வீழ்ச்சியே. இந்த வீழ்ச்சி சனங்களை நிர்க்கதியாக்கியுள்ளது.

இதனுடைய நீட்சியாக ஏராளம் பிரதிகள் வந்தன. போராட்டம் ஒடுங்க ஒடுங்க எதிர்ப்பிரதிகளும் (ஜனநாயகத்தின் குரல்களும்) அதிகமாக வரத் தொடங்கியது. ஒடுக்கத்தை விரிக்க முனையும் எத்தனிப்பு இது. இது தவிர்க்கவே முடியாத ஒரு வளர்ச்சி. மெய்யான விடுதலையை நோக்கிச் சிந்தித்தால் இது சரியென்றே தெரியும். இவற்றிலும் பல வகையுண்டு. வரட்சியான முறையில் ஒற்றைப்படையான எதிர்ப்பை மட்டும் வெளிப்படுத்தியவை. பன்முகத்தன்மையில் செழிப்பான விமர்சனங்களை ஜனநாயக ரீதியாக முன்னிறுத்தியவை. இதை விட அவரவர் அரசியல் நலன்களின் அடிப்படையில் முன்னிறுத்தப்பட்டவை என.

இப்படி வந்து கொண்டிருக்கும் மாற்றுப் பிரதிகளில் ஒன்றாக இந்தப் புதினத்தை தோழர் மு.சி. கந்தையா முன்வைத்துள்ளார். இந்தப் புதினம் 1970 களில் யாழ்ப்பாணத்தில் தொடங்கி வன்னியூடாக  2009 இல் போராட்டமும் அதற்கான போரும் தோற்கடிக்கப்பட்ட பிறகு முடிவுறுகிறது. இதற்குள்ளான காலப்பகுதியே இந்தப் புதினத்தின் காலக்களம். யாழ்ப்பாணமும் வன்னியுமே கதை நிகழ்களம். இதற்குள் நடந்த அரசியல் வரலாற்று நிகழ்ச்சிகளே கதைக்களம். இந்தக் காலக் களத்தில் பிரதான நிலையைக் கொண்டிருந்த இயக்கமொன்றின் போராளி ஒருவருடைய சாட்சியமாக இது எழுதப்பட்டுள்ளது. இந்தச் சாட்சியம் அல்லது இந்த வாக்குமூலம் எப்படி விவாதப் பொருளாகிறது? இது நம்முடைய இன்றைய வாசிப்பில் எத்தகைய அர்த்தத்தை உண்டாக்குகிறது என்பதே இதனுடைய சிறப்பாகிறது. ஏனென்றால் வெற்றியின் விளிம்பிலிருப்பதாக உணரப்பட்ட போராட்டம் எப்படித் தோல்வியைத் தழுவ நேர்ந்தது? அதற்கான காரணங்கள் எவ்வாறமைந்தன? வரலாற்றுச் சூழலில் உள் வெளி நிலைமைகள் எப்படியாக இருந்தன என்பதைக் குறித்த விசாரணையை இது செய்கிறது. இந்தப் புதினம் ஒரு மாற்றுப் பிரதியாக இது உருப்பெறுவது இந்த வகையில்தான்.

கேள்விக்கிடமில்லாத அதிகாரத்தைக் கொண்ட தலைமைத்துவ இயக்கத்தின் முதுநிலை உறுப்பினராக இருக்கும் போராளி – கனகு – என்ற முதல்நிலைப் பாத்திரத்தின் நினைவில் 40 ஆண்டுகால நிகழ்ச்சிகள் கட்டவிழ்கின்றன. அவர் பங்கெடுத்த இயக்கத்தின் வழியாக. இதை நாம் படிக்கும்போது 1970 கள் தொடக்கம் இலங்கையின் வடக்கே – குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் பின்னர் வன்னியிலும் நடந்த நிகழ்ச்சிகளின் நினைவுகள் மேலெழுந்து வருகின்றன. இப்படி வரலாற்றைத் தொட்டோ தழுவியோ எழுத முற்படும்போது அந்த நினைவுகள் வரலாற்றின் கால்களைச் சரிபார்க்க முற்படுவது இயல்பு. ஆனால், ஒரு புனைவு வரலாற்றைத் தழுவியும் மீறியுமே செல்லும். வரலாற்றை  எழுதுவதைப் போல அதற்குக் கட்டுப்பாடுகள் கிடையாது. புனைவுக்குப் பதிலாக வரலாற்றை எழுதுவதாக இருந்தால் அதற்கு நிரூபண உண்மைகளும் ஆதாரங்களும் அவசியம். புனைவு தனக்குத் தேவையான அளவுக்கே வரலாற்றிலிருந்து எதையும் எடுத்துக் கொள்ளும். இந்தப் புதினம் அந்த வகையில்தான் தனக்குரியதை மட்டும் இந்த வரலாற்றுக் களத்திலிருந்து எடுத்துக் கொள்கிறது. ஆனாலும் இதில் விடுபட்டவற்றைக் குறித்து வாசக மனதில் கேள்விகளும் இலக்கியச் சூழலில் விமர்சனங்களும் எழக் கூடும்.

இந்தப் புதினத்தின் மைய நோக்கு வரலாற்றின் நினைவுகளைத் தட்டியெழுப்பி அவை பற்றிய மீள்பார்வைகளை நமக்குள் உருவாக்குவதாகும். அதன் மூலம் நிகழ்காலத்தை நெறிப்படுத்தி, எதிர்காலத்துக்குப் பயணிக்கத்  தூண்டுவது. இதை எழுதியிருக்கும் மு.சி. கந்தையா இந்தக் காலக்களத்தில் ஒரு சக பயணியாக வாழ்ந்தவர். கடந்த நாற்பது ஆண்டுகளாக எழுத்திலும் களச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர். இதன்போது நிகழ்ந்த ஏற்ற இறக்கங்களை அனுபவத்திலும் அவதானித்திலும் கொண்டவர். என்பதால் முன்பு இல்லாது விட்டாலும் இப்போதாவது தகுந்த விமர்சனத்தை அல்லது மறுபார்வையை முன்வைக்க வேண்டும் என்று விரும்புகிறார். அது, தோற்கடிக்கப்பட்டு சிதைவுண்டிருக்கும் தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலத்துக்கு வளமூட்டும் என்பது இவருடைய நம்பிக்கை.

80களின் தொடக்கத்தில் இறைகுமாரன், உமைகுமாரன் கொலைகள், அல்பிரட் துரையப்பா கொலை, சுந்தரம் கொலை, யாழ்ப்பாணத்தில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட ஒடுக்குமுறை, இளைஞர்கள் பலியிடப்பட்டமை, இதற்கெதிராகவே இயக்கங்களுக்கெனத் திரண்ட பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் என அன்றைய கால (வரலாற்று)ச் சூழல் கண்ணில் விரிகின்றன. ஆனால் இதில் சில பெயர்களும் சில சம்பவங்களும் நேரடியடியாகவே சொல்லப்படுகின்றன. சில சம்பவங்களும் சில பெயர்களும் குறிப்புணர்த்தப்படுகிறது. கனகு செயற்படும் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நகுலன் என்ற பாத்திரம் கூட அப்படியான ஒன்றே. இதைப் படிப்போருக்கு இந்தப் பாத்திரம் யாரைச் சுட்டுகிறது என்று புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். அவ்வாறே இதில் சொல்லப்படும் இயக்கம் எது என்பதும் புரியும். அதைப்போல இதில் வரும் பல மனிதர்கள் பலரை நினைவுபடுத்துவர்.  குறிப்பாக வேலவன், அமுதன், நிக்ஸன், பாலசுந்தரம், விஜயன்… இயக்கத்திலிருந்து வெளியேறிச் சென்ற கீர்த்தனா…

சம்பவங்களும் அப்படித்தான்.

இதிலே நான் கவனித்த முக்கியமான அம்சமொன்றுண்டு. அது என் சொந்த அனுபவமும் அவதானமும்  கூட. நம்பிக்கையோடு இயக்கத்தில் இணைந்த பிறகு, கேள்விகளோடு தங்கள் போராட்டப் பயணத்தைத் தொடர வேண்டிய நிலை பலருக்கு ஏற்பட்டது. சேர்ந்திருக்கவும் முடியாமல் விலகிச் செல்லவும் முடியாத அவலநிலை இது. எல்லா இயக்கத்திலும் இவ்வாறான ஆட்கள் இருந்திருக்கிறார்கள். இவர்களை எந்த வகையில் வைத்துப் பார்ப்பதென்று இன்னுமே புரியவில்லை. வரலாறு இத்தகையவர்களுக்கு எவ்வாறான அடையாளத்தை வழங்கப்போகிறது? இவர்களுடைய பங்கேற்பையும் பங்களிப்பையும் அது எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறது? இவர்கள் யார்? என்பது கேள்வியே. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இதுவரையான என்னுடைய அவதானித்தின்படியும் அனுபவத்தின்படியும் இவர்களை எந்தத் தரப்பும் கொண்டாடியதாகவோ கவனித்ததாகவோ இல்லை. ஆனால் இறுதிவரையில் இவர்கள் தங்கள் பங்களிப்பை நேர்மையாக வழங்கியவர்கள். எப்போதும் சனங்களுடைய பக்கமாக நின்றவர்கள். இயக்கமும் போராட்டமும் சனங்களுக்கானதே என்ற நினைப்பிலும் உறுதிப்பாட்டிலும் இருந்தவர்கள். இதற்காகச் சொந்த இயக்கத்தினாலேயே சந்தேகிக்கப்பட்டனர். அல்லது தூரத்தில் நிறுத்தப்பட்டனர். இதனால் உத்தரிப்போடு வாழ்ந்தவர்கள். இந்த நேர்மையைக் குறித்துப் பலருக்குக் கேள்வியும் மறுப்புகளும் எழலாம். ஆனால், அவர்களைப் பொறுத்தவரை எப்போதும்  மக்களுக்கும் இயக்கத்துக்கும் தமது மனதுக்குமிடையில் நேர்மையான வகையிலேயே  இருந்தனர்.

இயக்கத்தின் தவறான போக்கைச் சுட்டிக்காட்டினால் துரோகி முத்திரை.  தட்டிக் கேட்டால் எதிரி  அடையாளம்.  இதற்குள்ளும் விலகிச்சென்றவர்கள் இருக்கிறார்கள். தப்பியோடியவர்கள் உண்டு. எதிர்த்தவர்கள்,  எதிர்த்து  துரோகி அடையாளத்தோடு முடிந்து போனவர்கள் என்று ஒரு எதிர்வரிசை உண்டு. இவர்களிடமும் நேர்மை உண்டு. இதனால் சரியோ தப்போ அவர்களுக்கென்றொரு வரலாற்று அடையாளம் உண்டு. அதைப்போல எந்தக் கேள்வியும் விமர்சனமும் இல்லாமலே உடல், பொருள், ஆவி அனைத்தையும் இயக்கத்துக்கும் தலைமைக்கும் என விசுவாசமாகத் தம்மை அர்ப்பணித்தவர்களும் உண்டு. இவர்கள் தியாகிகளாகவும் வீரர்களாகவும் கொண்டாடப்படுகிறார்கள்.  இவர்களுடைய நோக்கில் இது நேர்மையானது. ஆனால் 
இவையெல்லாவற்றுக்கும் அப்பால் மக்களுக்கு எது நன்மையைத் தரக் கூடியதாக இருக்கிறதோ அதுதானே உண்மையான நேர்மையாகவும் சரியாகவும் இருக்க முடியும்.

இங்கே மு.சி. கந்தையா, கேள்வியோடும் விமர்சனத்தோடும் கொந்தளித்துக் கொண்டிருந்த – காலம் முழுதும் உத்தரித்துக் கொண்டிருந்த – பாத்திரங்களுக்கு வரலாற்று முகத்தைக் கொடுத்துள்ளார். இவர்கள் மக்களின் உணர்வுகளுக்கும் கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை உடையவர்கள்.

இயக்கத்தில் ஜனநாயகம் வேண்டும் என்று விரும்புகின்றவர்கள். ஏனைய போராட்டத் தரப்புகளுக்கும் வரலாற்றிடம் உண்டென்று கருதுகின்றவர்கள். அதேவேளை தமது அமைப்பை விட்டு, அதன் கட்டுப்பாடுகளை விட்டு விலகமுடியாமல் அதனுடன் சேர்ந்திருப்பவர்கள். அமைப்பு இவர்களைச் சந்தேகித்தாலும் புறக்கணித்தாலும் அதையும் உணர்ந்து கொண்டே பயணிப்போர். தாம் நேர்மையாக நடக்கிறோம் என்ற உறுதிப்பாடே இவர்களுடைய வாழ்க்கையும் வழியுமாகும். அது முட்டாள்தனமாகச் சிலருக்குத் தோன்றினாலும் அதை விட்டு விலகாத வரலாற்றுப் பாத்திரங்கள்.

“சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எங்களது தாயகத்தை மீட்டெடுக்கும் பொறுப்பு எங்களுக்கு மட்டுமே உரியது என்று ஒரு போதும் நாங்கள் கதைக்கவும் இல்லை. ஆனால் இப்பொழுது இதை விடுவிக்கும் பொறுப்பு எங்களிடமே உள்ளது என்ற எண்ணம் அடிமனதின் மூலையில் பதிவாகிப் போனது போலும். அதனாலோ என்னவோ, அந்தத் தாக்குதலைத் தொடுத்தவர்களைப் பற்றிய தேடுதலை நோக்கி எனது சிந்தனை துரிதப்பட்டது.

‘இது நாங்கள் மட்டும்தான் என்ற உளவியலா? இதுபோன்ற ஒரு சிந்தனையை கட்டமைத்துக் கொள்வது எந்த வகையில் நியாயம்? இதுவும் ஒரு மேலாதிக்க சிந்தனை இல்லையா?’ வினாக்கள் எனக்குள்ளே மோதின. என்று கனகு சிந்திக்கிறான்.

மேலும் “‘தவறுகள் தொடங்கி விட்டன. இதை எந்த இடத்தில் தடுத்து நிறுத்துவது?’ எனவும் கவலைப்படுகிறான்.

கனகுவே இந்த இடைநிலைப் பாத்திரம். கனகு சந்திக்கும் மனிதர்களும் அவனுடைய அரசியல் உறவுகளும் இத்தகைய சிந்தனையைக் கொண்டவர்களே!

“தம்பி உமக்கு தெரியாதது ஒன்றுமிருக்க முடியாது. எனக்கும் புரியாமல்தான் ஒன்றைக் கேக்கிறேன். குடாநாட்டில் ஒரே மொழிக்கு உரியவர்களாக நாங்களிருந்தாலும் மதங்களும் சாதிகளும் நமக்குள்ளேயும் உள்ளதை நீர் மறுத்துரைக்க மாட்டீர். இதைப்போல வேறுபட்ட கருத்துகளை கொண்டவர்களும் இருப்பினம்தானே….? இதைத் தவிர்க்க முடியுமே….?”

“ஜனநாயகம் நமக்கு மறுக்கப்பட்டு வருவதால் நீங்களும் போராட கிளம்பினீர்கள்…?  இப்பவும் சில இயக்கங்களில் ஜனநாயகம்  மறுக்கப்பட்டு வருவதாக கதைக்கினம். உண்மையே…?” என்று முத்தண்ணன் கனகுவைப் பார்த்துக் கேட்கிறார்.

இவ்வாறான கேள்விகளை எல்லா இயக்கத்தை நோக்கியும் மக்கள் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும், யாரிடம் இந்தக் கேள்விகளைக் கேட்க முடியும்? யாரிடம் விமர்சனங்களை முன்வைக்கலாம் என்று. எல்லோரிடமும் வாயைத் திறக்க முடியாது. அப்படி இடந்தெரியாமல் வாயைத் திறந்ததால் மண்டையைப் பிளந்தவர்கள் உண்டு.

கனகு மக்களின் மனதோடு பயணிக்கிறான். ஏனென்றால் போராட்டம் அவர்களுடைய விடுதலைக்குத்தானே தவிர, இயக்கத்திற்கானதோ வேறு எதற்குமானதோ அல்ல என்று சிந்திக்கின்றவன். “காலத்தின் தேவையை அறிந்து செயல்படுவது முக்கியமல்லவா? ஒரு தலைமுறையினரின் வாழ்வை இல்லாமல் ஆக்கிவிட்டது. இனியும் போர் சூழலுக்குள் மக்களை உள்ளாக்குவதுப் பற்றி சிந்திக்க வேண்டும் கனகு… அரசியல் அதிகாரத்தை முழுமையாக்கிக்‍ கொள்ள ஜனநாயக வழிமுறைகளை பயன்படுத்திக் கொள்வதும் அவசியம் என்பதை நீயும் ஏற்பாய் என நம்புகிறேன்” என்று அவனுடைய ஆசிரியர் ஒருவர் கனகுவிடம் நேரில் கேட்கிறார்.

அதனால், “நீயும் என்னைப்போல் ஊருக்கே சென்று பத்து இருபது நாட்கள் சுற்றித் திரிந்துவிட்டு வாரும். அப்பொழுது தெரியும் மக்களிடமிருந்து வரும் கேள்விகள் என்னதென்று!” என்று கனகு சக போராளியிடம் சொல்கிறான். உண்மையும் இதுதான். ஏனென்றால் தமிழ் மக்கள் இயக்கங்களை ஆதரித்தது வன்முறை வழியை ஒட்டு மொத்தமாக ஏற்றுக்கொண்டதால் அல்ல. அரச வன்முறையை தடுக்கவே. அதுவும் வன்முறை இயக்கங்களை 1983 இல் நடந்த பெரிய இன வன்முறையின் பின்னர் தான் பெரும்பாலானோர் ஆதரிக்கத் தொடங்கினார்கள்.

ஆனால் அந்த வன்முறையை சொந்த மக்கள் மீதும் இயக்க உறுப்பினர்கள் மீதும் செலுத்துவதற்கு மக்கள் ஆணை கொடுக்கவில்லை. மட்டுமல்ல மக்கள் சமாதான பேச்சுவார்த்தைகளை முழுதாகவே ஆதரித்தனர். இந்தியப் படை வந்தபோது அளிக்கப்பட்ட வரவேற்பு இதற்கொரு உதாரணம். ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க என ஒவ்வொரு காலகட்டத்திலும் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின்போதும் சமாதானத்துக்கு ஆதரவளித்தனர். ஆனால் மக்களின் விருப்புக்கு மாறாக யுத்தம் மேற்கொள்ளப்பட்டது. போரை நோக்கிய பயணிப்பே நிகழ்ந்தது. இதை சம்மந்தன் என்ற  பாத்திரத்தின் வழியாக “நட்பு சக்திகளை இதுவரையும் நாம் இனம்காணவில்லை. காலம் இதை உணர்த்தினாலும் நம்மால் உணர முடியவில்லை”

‘காலமும் சூழலும் எல்லாவகையிலும் சாதகமான நிலையைத் தோற்றுவித்தும் அதை நாம் பயன்படுத்திக் கொள்வதில் ஏற்பட்டுள்ளப் பின்னடைவுக்கு காரணம்?” என மு.சி.க ஆதாரப்படுத்துகிறார்.

இந்த மாதிரியான நிலைமைகள் கனகுவைக் கேள்விக்குள்ளாக்கி, கனகுவிடம் சஞ்சலத்தை ஏற்படுகிறது,“அரசியல் புரிதல் என்பது கற்பதும், கற்பதை நெறிப்படுத்துவதும், மீண்டும் கற்பதும் என அறிஞர்களில் யாரோ ஒருவர் கூறியதாக ஞாபகம். ஆனால் இவை அனைத்தும் ஏட்டுச்சுரக்காய்” கதையாகிப் போனதோ என்ற எண்ணம்தான் என்னோடு தொடர்ந்து கொண்டிருந்தது. இவை எனது பலவீனத்தின் பக்கமாகவும் தோன்றலாம். ஆனால் நாங்கள் கட்டமைத்துக்கொண்ட அமைப்பும் அதன் செயல்களும் அதன் நோக்கத்திலிருந்து விடுபடவில்லை என்பதாலே என்னையும் அதில் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறேன்” என.

இதற்கும் ஒரு நியாயம் அமுதன், நகுலன் என்ற பாத்திரங்களின் வழியாக முன்வைக்கப்படுகிறது ““நாம் இப்பொழுது நடத்தும் போராட்டம் எமது தாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டம். இதைப் பற்றிய கருத்துகள், அபிப்பிராயங்கள் அனைத்தும் வெவ்வேறு நிலைகளில் வேறுபட்டு நிலவுவதும் தவிர்க்க இயலாது. இதில் அனைவரையும் திருப்திபடுத்துவதும் சாத்தியமற்றது கனகு” என்றான் அமுதன்.

““இழப்புகளையும் நாம் எதிர்கொள்ளவேண்டும்” “தியாகம் இல்லாமல் வெற்றி இல்லை. “மரணங்களை விழைவிப்பது நமது நோக்கமல்ல. ஆனால் நம்மை அதைச் செய்ய நிர்பந்திக்கின்றனர்” – நகுலன்.

இந்த நியாயங்கள் கனகுவிற்குக் குழப்பத்தை உண்டாக்குகின்றன. ஆனால்  “அமைப்பு தொடங்கப்பட்டபோது நாம் என்ன முடிவை எடுத்தோம் என்பதை நீர் மறந்துவிட்டது போல் எனக்குத் தோன்றுகிறது? நாமும் பல இழப்புகளை சந்தித்திருக்கின்றோம். நமது முடிவில் உறுதியாக இருந்தே ஆகவேண்டும். எமது முடிவில் எக்காரணத்தைக் கொண்டும் சமரசப் படுத்தலுக்கு இடமே இல்லை!” என்று தலைமைப் பொறுப்பிலிருக்கும் நகுலன் சொல்லும் நியாயங்கள் அவனை மௌனமாக்கி விடுகின்றன.

இதேவேளை “தாக்குதல் உத்தியில் உள்ள ஞானம் அரசியலில் இல்லாமல் போனது என்று கூறவும் முடியாது. கடந்த காலத்தில் அமைதி பெயரில் தாயகத்துக்குள் நுழைந்த படைகளை வெளியேற்ற எதிரிப்படையின் அரசியல் அதிகாரத்தலைமையுடன் செய்த உடன்பாடு மிகப்பெரும் வெற்றிக்கு வழி வகுத்துள்ளதை மறந்துவிடவா முடியும்?” என்ற கேள்வியும்

தொடர்ந்து “நமது அமைப்பு தொடங்கிய காலத்தில் எடுத்த நிலைப்பாடே இறுதிவரை சரியானதாக இருக்க முடியுமா? மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தற்காலிகமாக மாற்றம் ஏற்படுத்திக்கொண்டால் என்ன பாதிப்பை தோற்றுவிக்கும்? முடிவுகளை எடுப்பதில் ஏற்படும் சிறிய சறுக்கலும் மிகப்பெரும் அபாயத்தை எதிர்கொள்ளநேரிடும் என்பதை எப்படி உணர்த்துவது?” என்றும்

“நிலவும் சூழலை கணக்கில் கொண்டு முடிவுகளை எடுக்கும் அரசியலை உள்வாங்கியுள்ள அமைப்பிடம் எதிர்பார்க்க வேண்டியதை, ஒரு இராணுவ அமைப்புக்கான செயல்திட்டங்களோடு தொடரும் தலைமையிடம் எதிர்பார்ப்பது எப்படி  சாத்தியமாகும்? என்ற கேள்வியும் எழுந்தது என தொடர்ந்து தனக்குள் குழம்பிக்கொள்ளும் பாத்திரமாக கனகு தொடர்ந்தும் இருக்கிறான். இறுதியில் துயர வரலாற்றுடன் மிஞ்சுகிறான். இந்தத் துயர வரலாறு அவனை மீள எல்லாவற்றையும் பார்க்கத் தூண்டுகிறது.

ஈழப்போராட்டத்தின் பல்வேறு கோணங்களில் நமக்குப் பல பிரதிகள் வந்துள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு முகமும் தொனியும் உண்டு. இது வரலாற்றில் அல்லாடும் பாத்திரமொன்றின் சித்திரம். ஆனால் இதுவே மக்களுக்கான சிந்தனையைக் கொண்டுள்ளது என்பது மு.சி.கவின் நிலைப்பாடு. இதுதான் மு.சி.கவின் இந்தப் புதினத்தின் சிறப்பாகும்.

–         கருணாகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்