
கடந்த சில நாட்களாக வடக்கில் பேசுபொருளாகிய விடயங்களில் வடக்கின் சுகாதாரத் திணைக்களத்திற்குப் பணிப்பாளர் தெற்கிலிருந்து நியமிக்கப்பட்டதும் ஒன்றாகியது.
இந்த நியமனத்தை ஒட்டியும் வெட்டியும் பகிரங்கமாகவும் திரைமறைவிலும் பல விவாதங்கள் மற்றும் நகர்வுகள் நடந்தேறின.
முதலில் வடக்கு அரச அதிபர் நியமனத்தில் ஆரம்பித்து வடக்கு மாகாண பிரதம செயலாளர் நியமனம் தொடக்கம் தென்பகுதி நிர்வாகிகளது வடபகுதி வருகையின் ஆகப்பிந்திய வடிவம்தான் வடக்கு சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் நியமனம்.
இவை அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் எவரும் துல்லியமாக இனங்காணும் ஒரு பண்பியல்பாக தமிழ்ச் சமூகத்தின் ‘வந்தபின் காக்கும்’ செயல்பாடுகள் உள்ளன.
அதாவது, குறித்த நியமனங்கள் தொடர்பில் தமிழர் தரப்பிலிருந்து ஆற்றப்படும் வினையானது காலம் கடந்ததாக அல்லது காலம் பிந்தியதாகவே அமைந்து வருகின்றன.

அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தமது பத்திகளில் அடிக்கடி வலியுறுத்தும் விடயங்களில் கூட்டு உளவியல் மற்றும் ஒரு சமூகமாகச் சிந்திப்பது ஆகியன அடங்கும்.
அவ்வாறு ஒரு சமூகமாகச் சிந்திக்கத் தவறுகின்றபோது நாம் இழப்பவை பாரதூரமான பின்விளைவுகளை தந்துவிடுகின்றன.
எமது சமூகத்தின் கூட்டு உளவியலைத் தக்கவைக்க வேண்டிய அரசியல்வாதிகளும் ஊடகங்களும் ‘சாவீட்டு அரசியலைச்’ செய்துகொண்டிருக்கிறார்கள்.
ஊடகத் தொடர்புகள் வழியாக முன்கூட்டியே அறிந்து எனது முகநூலில் புதிய பணிப்பாளர் நியமனம் தொடர்பாகப் பதிவிடும் வரையில் வடக்கு சுகாதாரத்துறையினருக்கே விடயம் தெரியாத நிலையே காணப்பட்டது.
அதன்பின்னர் அலறிப்புடைத்து எழுந்தவர்கள் சிலர் கடிதம் எழுதத்தொடங்க இன்னும் சிலரோ ‘வடக்கிற்கு அடுத்த சிங்களவர் நியமனம்’ என ‘இனவாத தலையங்கங்களால்’ சனங்களை உசுப்பேற்றினர். தமிழ் மக்கள் பிரதிநிதி ஒருவர் பாராளுமன்றத்தில் பிரசண்டம் செய்து தனது வாக்காளர் வாயில் பால் வார்த்தார்.
அதை விட வேடிக்கை என்னவெனில் குறித்த பதவிக்குத் தகுதியானவர்கள் வடக்கில் உள்ளார்கள் என்ற விடயம் ‘சிங்களவர்’ நியமிக்கப்பட்ட செய்தி கிடைக்கும்வரை வடமாகாண சுகாதாரத் திட்டமிடல் ‘புலிகளது’ கண்களில் படவில்லை. பின்னர் தான் வடக்கில் உள்ள தகுதிவாய்ந்தவர்களது பெயர் தகுதி மூப்பு உள்ளிட்ட துல்லியமான விபரங்களை ஊடகங்களுக்கு வழங்கிப் பதறியடித்தார்கள். அதிலும்கூடப் பிரதேசவாதம் மறைந்திருந்தது. வடக்கில் நான்கு தகுதி வாயந்தவர்கள் இருக்கும் நிலையில்இ மூவரது விபரங்களே ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.
உறங்கிய தரப்புகள்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றி வந்த வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் தமது வருடாந்த இடமாற்றத்தின்படி யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக 06.05.2022 வெள்ளிக்கிழமையன்று கடமையேற்றார். வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனம் பிறிதொருவருக்கு வழங்கப்படும் வரையில் பதில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராகக் கேதீஸ்வரனே கடமையாற்றுவார் என ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. இதற்கு அமைவாக வைத்தியநிபுணர் திலிப் லியகேயின் நியமனம் 31.08.2022 அன்று அதாவது மூன்று மாதங்களின் பின்னர் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இடைப்பட்ட இந்தக் காலப்பகுதியில் வடக்கில் இருந்து தகுதியான ஒருவரை நியமிப்பதற்கான சாத்தியங்கள் இருந்தனவா என்ற கேள்விக்கு விடை ஆம் என்பதாகவே அமைந்துள்ளது.
வடக்கின் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவி வெற்றிடமாகியதும், அந்த வெற்றிடத்திற்கு வடக்கில் இருந்து தகுதியான ஒருவரை தற்காலிகமாக நியமித்திருப்பதற்குச் சிறந்த அவகாசம் இருந்திருக்கிறது என்றே சுகாதார அமைச்சின் நிர்வாக பிரதிப் பணிப்பாளர் நாயகமாக இருந்து இளைப்பாறிய இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘ஒரு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவி வெற்றிடம் ஆகும்போது, அதற்கான நிரந்தர நியமனம் மத்திய அரசினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டு புள்ளிகள் அடிப்படையில் நேர்முகத்தேர்வு மூலமாகவே மேற்கொள்ளப்படும். அதுவரையில் குறித்த பதவிக்குப் பதில் கடமையாற்றுவதற்காக தகுதிவாய்ந்த ஒருவரை சுகாதார அமைச்சு நியமிக்கும்.’
‘வடக்கில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவிக்கு தகுதியான நால்வர் உள்ளனர். தகுதி நிலையின் அடிப்படையில் யாழ் போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் நந்தகுமார், மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் வினோதன், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் உமாசங்கர் ஆகியோரே அவர்கள்.’
‘இவர்களில் எவரையாவது மாகாண சுகாதார அமைச்சானது அணுகி, பதில் கடமையாற்றுவதற்கு அவர்களது சம்மதத்தினைத் தெரிவிக்கும் கடிதத்தினைப் பெற்றிருக்க வேண்டும். அந்தக் கடிதத்துடன் தமது பரிந்துரையினையும் இணைந்து மாகாண ஆளுனரது ஒப்புதலுடன் அவர் ஊடாக மத்திய சுகாதார அமைச்சிற்கு அனுப்பிவைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் மேற்குறிப்பிட்ட நால்வரில் ஒருவர் வடக்கு மாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக மத்திய அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டிருப்பார்.’ என்றார்.
நாம் அறிந்த வரையில் மாகாண சுகாதார அமைச்சிலிருந்து இவர்கள் நால்வரில் எவரையாவது நியமிக்குமாறு ஆளுநர் ஊடாகப் பரிந்துரைகள் எதுவும் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை.
யார் அந்த ‘உணர்வாளர்கள்’?
அவ்வாறானால், ‘மத்திய அரசினால் நியமனம் வழங்கப்பட்டவர் வந்து சேர்வதற்கு முன்பாக அவருக்கு இங்கு வருவதற்கு எவ்வித தகுதியும் இல்லை என்று பிரச்சாரத்தினை முன்னெடுக்க முற்பட்டவர்கள் யார்?. அந்தத் தகவல்கள் உண்மையானவையா?’ என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.
நாம் அறிந்த வகையில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் நிழல் நிர்வாகம் நடாத்திய தரப்பினர்தான் தமது இருப்பும் சிறப்பும் பறிபோகப்போகிறது என்ற பதகளிப்பில் பிரச்சாரத்தில் ‘திட்டமிட்ட வகையில்’ ஈடுபட்டு ஒரு எதிர்ப்பலையினை கிளப்ப முற்பட்டுள்ளனர். அதற்கு வசதியாக வடக்கில் உள்ள தகுதிவாய்ந்தவர்களது பெயர் விபரம் என்றொரு பட்டியல் ஊடகங்களுக்குப் பகிரப்பட்டது.
அந்த விபரங்களின்படி ‘வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகுவதற்குரிய தகுதிகளுடன் மாகாண சுகாதார சேவையில் மருத்துவர் நந்தகுமார்இ காணப்படுகிறார். அத்துடன் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ள மருத்துவர் திலிப் லியனகேயைவிட மூப்புநிலையில், மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் வினோதன், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் உமாசங்கர் ஆகியோர் உள்ளனர்’ என்றுள்ளது.
இதுகுறித்து தேடிப்பார்த்தபோது சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் இந்த மருத்துவர்களது மூப்புப் பட்டியல் கண்ணில்பட்டது. அப்படியலின்படி மூப்பு நிலையில் மருத்துவர் திலிப் லியனகே 90வது இடத்திலும்இ மருத்துவர் உமாசங்கர் 117வது இடத்திலும் மருத்துவர் வினோதன் 118வது இடத்திலும் உள்ளனர்.
மேலும் மூப்புநிலையிலும் தகுதியிலும் முன்னிலையில் உள்ள மருத்துவர் சத்தியமூர்த்தியின் பெயர் (திட்டமிட்டு?) குறிப்பிடப்படவில்லை. ஆக மக்களைத் திசைதிருப்பும் தவறான தகவலே சிலரால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது இதிலிருந்து உறுதியாகிறது.
தகுதியானவர்களது நிலைப்பாடுகள்

வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தியை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு சுகாதார அமைச்சு கோரியபோதும் ‘யாழப்பாணப் போதனா வைத்தியசாலையில் நிறைவேற்றப்படவேண்டிய சில கடமைகள் உள்ளதால் தற்போது தமக்கு அவ்வாறு விண்ணப்பிக்கும் எண்ணம் இல்லை’ என மறுத்துவிட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து அறிய முடிகிறது.
அவ்வாறே வைத்திய கலாநிதி நந்தகுமாரனும் மருத்துவக் காரணங்களைக் காட்டி அப்பதவியை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை எனத் தெரியவருகிறது.
‘மருத்துவ நிர்வாக சேவை விசேட வைத்திய நிபுணர் வினோதன் மன்னார் மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாகப் பணியாற்றுகிறார். இவரது சிறப்பான தலைமைத்துவத்தினை மன்னார் மாவட்டத்தில் அனைவரும் பாராட்டும் அதே நேரம் வடமாகாண சுகாதரத்திணைக்களம் அவருக்கு உரிய இடத்தினை வழங்கியிருக்கவில்லை. மாறாக வைத்தியநிபுணர் வினோதன் குறித்து தவறான கருத்துருவாக்கத்தினை ஆளுனர் உட்பட்ட மாகாண உயர் நிர்வாக மட்டங்களில் உருவாக்குவதிலேயே சில மாகாண சுகாதார உயரதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதனால் அவர் வடமாகாணத்திற்கு வெளியே பொறுப்புகளை ஏற்கும் சந்தர்ப்பத்திற்காகவே காத்திருக்கிறார்’ என மன்னாரில் அவருக்கு நெருக்கமான தரப்புகள் தெரிவித்தன.
‘மருத்துவ நிர்வாக சேவை விசேட வைத்திய நிபுணர் உமாசங்கர் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறப்பாக தமது கடமைகளைச் செய்து வருகிறார். இவர் உரிய காலத்தில் விண்ணப்பங்கள் கோரப்படும்போது விண்ணப்பித்து தகுதியான பதவியை பெறுவதையே பெரிதும் விரும்பும் ஒருவர். மேலும் தனது மேலதிகாரியாக இருந்தவருக்கு (முன்னாள் மாகாணப்பணிப்பாளர்) மேலதிகாரியாகச் செல்வது அவரை அவமதிப்பது போலாகும் என்ற கருத்துக் கொண்டவர். இதனால் இவர் குறித்த பதவியைப் பெறுவதில் ஆர்வம் காட்டியிருக்கவில்லை’ என முல்லைத்தீவு சுகாதாரத்திணைக்கள வட்டாரங்களில் இருந்து அறிய முடிந்தது.
ஆக மொத்தத்தில் வடக்கில் தகுதியானவர்கள் இருந்தும் பல்வேறு காரணங்களால் அவர்கள் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியினைப் பொறுப்பேற்பதற்கு தயாரில்லை என்பது தெளிவாகிறது.
அப்படியானால் தகுதியானவர்கள் தமிழர்கள் என்ற வகையில் ஒரு சமூகமாகச் சிந்தித்து ஏன் தொலைநோக்கு முடிவினை எடுத்திருக்கவில்லை?
வடக்கு சுகாதாரத்துறையின் உயர் பதவியினை வெளிமாவட்டத்தில் இருந்து எவரும் வந்து கவர்ந்து கொள்ளமாட்டார்கள் என்ற அசட்டுத் துணிச்சல் அவர்களுக்கு இருந்தது என நாம் கொள்ளலாமா?
இன்னொரு வகையில் சொல்வதானால் ‘வடக்கின் பதில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றும் கேதீஸ்வரனுக்குச் சவாலாக வடக்கில் எவரும் வரப்போவதில்லை. தெற்கில் இருந்தும் எவரும் வரமாட்டார்கள்’ என்ற அசாத்திய நம்பிக்கையில் அனைவரும் உறங்கினார்களா?
நிலமை இவ்வாறு இருக்கையில் கடந்த மூன்று மாதங்களாக வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவி வெற்றிடமாக இருப்பதையும், அதனை முன்னாள் வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதில் கடமையாக கவனித்து வருவதையும் அறிந்தும் அறியாத ‘மோன நிலையில்’ இருந்துவிட்டு இப்போது கூச்சலிட்டு என்ன பயன்?
விடயங்களைத் தொகுத்துப் பார்க்கும்போது இப்பத்தியின் ஆரம்பத்தில் சொன்ன ‘வந்தபின் காக்கும்’ பண்பியல்பு துல்லியமாகத் தெரிகிறது.
காலம் கடக்கவில்லை.
சுகாதார அமைச்சின் தகவலின்படி தற்போதை வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் நியமனம் ஒரு தற்காலிக நியமனமே.
எனவே நிரந்தர நியமனத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படும்போது தகுதிவாய்ந்த தமிழர்கள் அதற்கு விண்ணப்பிப்பதை உறுதிப்படுத்துவது தமிழ் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு.
எங்களுக்குள் இருக்கின்ற வேறுபாடுகள், தனிப்பட்ட நலன்கள், போன்றவற்றை விட்டுவிட்டு ஒரு இனமாக சிந்தித்து செயற்பட வேண்டியது ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்ற சிறுபான்மை இனமாக இருக்கின்ற தமிழ் சமூகத்திற்கு கட்டாயமானது.
இல்லையேல் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பது அருங்காட்சியத்தில் பார்வையிடவேண்டிய ஒன்றாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.